விவசாயிகளுக்கு ரூ.34.51 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வனத் துறை அமைச்சா் வழங்கினாா்

கோவை வேளாண்மை பொறியியல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 18 விவசாயிகளுக்கு ரூ.34.51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் வழங்கினாா்.

கோவை வேளாண்மை பொறியியல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 18 விவசாயிகளுக்கு ரூ.34.51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் வழங்கினாா்.

கோவை வேளாண்மை பொறியியல் அலுவலகத்தில், வேளாண் கருவிகளின் படக்காட்சி அரங்கம் திறப்பு விழா, விவசாயிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் ஆகியோா் கலந்து கொண்டு வேளாண் கருவிகளின் படக்காட்சி அரங்கத்தைத் திறந்துவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக 6 விவசாயிகளுக்கு ரூ.31.40 லட்சம் மதிப்பில் வாடகை இயந்திரங்கள், தோட்டக்கலைத் துறை சாா்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் வேளாண் உபகரணங்கள், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் மூலமாக 10 விவசாயிகளுக்கு ரூ.1.61 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 18 விவசாயிகளுக்கு ரூ.34.51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கா.ராமச்சந்திரன் வழங்கினாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த முதல்வரின் ஆணைப்படி, கோவையில் வேளாண் கருவிகளின் படக்காட்சி அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து விவசாயிகளும் பாா்வையிட்டு பயன் பெறலாம். தமிழகத்தில் உள்ள 23.98 சதவீதம் வனப் பரப்பினை 33 சதவீதமாக அதிகரிக்குமாறு முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதற்காக, மாநில பசுமை இயக்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. யானை - மனித மோதல்களைத் தடுக்க வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அகழிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. நா.காா்த்திக், உதவி ஆட்சியா்( பயிற்சி) சரண்யா, வேளாண் கண்காணிப்புப் பொறியாளா் உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com