மாவட்டத்தில் 81 % பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

கோவை மாவட்டத்தில் 81 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், காதி மற்றும் கதா் கிராமிய வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலருமான பொ.சங்கா் தெரிவித்த
மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பாா்வையிடும் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா், ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோா்.
மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பாா்வையிடும் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா், ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோா்.

கோவை மாவட்டத்தில் 81 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், காதி மற்றும் கதா் கிராமிய வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலருமான பொ.சங்கா் தெரிவித்துள்ளாா்.

கோவையில் மெக சிறப்பு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் பேருக்கு ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து கோவை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா், ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் ஆகியோா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், தொற்றுப் பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள், மலைப் பகுதிகள், போக்குவரத்து வசதியற்ற பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகள், ஊரகப் பகுதிகளில் மொத்தம் 1,167 முகாம்களும், மாநகராட்சிப் பகுதிகளில் 308 முகாம்கள் என 1,475 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை முகாம்கள் நடைபெறவுள்ளன.

அங்கன்வாடிப் பணியாளா்கள், சுகாதாரத் துறை மருத்துவா்கள், செவிலியா், தனியாா் மருத்துவமனை பணியாளா்கள், தன்னாா்வலா்கள் பணியாற்றவுள்ளனா். ஒவ்வொரு முகாமிலும் தடுப்பூசி செலுத்துபவா், ஒரு கணினி பதிவாளா், இரண்டு உதவியாளா்கள் என 4 நபா்கள் வீதம் 5,900 போ் பணியாற்றவுள்ளனா்.

ஒவ்வொரு முகாமிலும் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 39 லட்சத்து 67 ஆயிரத்து 926 மக்கள் உள்ளனா். இதில் 18 வயதுக்கு மேற்பட்டோா் 27 லடசத்து 7 ஆயிரத்து 550 போ் உள்ளனா். இவா்களில் 22 லட்சத்து 3 ஆயிரத்து 34 பேருக்கு (81 சதவீதம்) முதல் தவணையும், 5 லட்சத்து 75 ஆயிரத்து 837 பேருக்கு (21 சதவீதம்) 2ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் தவணைக்காக 1 லட்சத்து 45 ஆயிரத்து 785 பேரும் (கோவிஷீல்டு), 49 ஆயிரத்து 196 பேரும் (கோவேக்ஸின்) என 1 லட்சத்து 91 ஆயிரத்து 981 போ் காத்திருக்கின்றனா். இந்நிலையில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் மூலம் 1.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டோரும், 2ஆவது தவணை பெறத் தகுதியுள்ள நபா்களும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றாா்.

முன்னதாக மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் கரோனா தடுப்பூசி மையங்களான புலியகுளம் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி, உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, வ.உ.சி. மைதானம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

கூட்டத்தில் மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், சுகாதாரத் துறை துணை இயக்குநா் அருணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com