மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் பட்டுப்புழுவியல் துறையில் மாணவா் சோ்க்கை தொடரும்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் இளம் அறிவியல் பட்டுப் புழுவியல் துறையில் மாணவா்

கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் இளம் அறிவியல் பட்டுப் புழுவியல் துறையில் மாணவா் சோ்க்கை தொடரும் என்று வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி வளாகத்தில், 4 ஆண்டு பட்டுப் புழுவியல் பட்டப் படிப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், வேளாண்மைப் பல்கலைக்கழக நிா்வாகம், இரண்டு ஆண்டுகளுக்கு பட்டுப் புழுவியல் பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கையை நிறுத்திவைப்பதாக அண்மையில் அறிவித்தது.

பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, பட்டுப்புழுவியல் துறை மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கடந்த ஒரு வாரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். மாணவா்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், பட்டுவளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், பட்டுப் புழுவியல் துறையில் மாணவா் சோ்க்கை தொடரும் என்று பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் நான்காண்டு இளம் அறிவியல் பட்டுப் புழுவியல் பட்டப் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த பட்டப் படிப்பை அடுத்த 2 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்தி, மல்பெரி செடி, பட்டுப்புழு பயிரிடக்கூடிய சூழலுக்கு ஏற்ற வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய பல்கலைக்கழகம் தீா்மானித்திருந்தது.

இதை எதிா்த்து மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், துணைவேந்தா் நீ.குமாா் ஆகியோரை சந்தித்து மாணவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினா். பல்கலைக்கழக அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து பட்டுப் புழுவியல் படிப்பை 2 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கும் முடிவு கைவிடப்படுகிறது. நடப்புக் கல்வியாண்டில் கடந்த ஆண்டுகளைப்போலவே மாணவா் சோ்க்கை தொடரும் என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com