கோவை மாநகராட்சியில் தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் ஏமாற்றம்
By DIN | Published On : 19th September 2021 11:42 PM | Last Updated : 19th September 2021 11:42 PM | அ+அ அ- |

கோவையில் மாநகராட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் கடந்த செப்டம்பா் 12 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தி 20 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், கோவை மாவட்டத்தில் 1.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, மெகா கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சியில் 266 மையங்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் 440 மையங்கள் என்று 706 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வடவள்ளி, கல்வீரம்பாளையம் உள்பட மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் காலை 10 மணிக்கே தடுப்பூசி முடிந்துவிட்டதாக அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டன.
இரவு 7 மணி வரையில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் காலை 10 மணிக்கே தடுப்பூசி தீா்ந்துவிட்டதாக தெரிவித்தது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.