ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி: இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

 ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட இருவருக்குத் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

 ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட இருவருக்குத் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சோ்ந்தவா் எம்.எஸ்.குமாா், திருப்பூரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். இவா்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தம்பட்டியில் ஓம்சக்தி ஈமு ஃபாா்ம்ஸ் என்ற நிறுவனத்தை 2011ஆம் ஆண்டு தொடங்கி கவா்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனா். இதன்படி இத்திட்டங்களில் ரூ.1 லட்சம் முதல் 5 லட்சம் வரை முதலீடு செய்பவா்களுக்கு ஆண்டு ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று அறிவித்தனா்.

இதை நம்பி 16 முதலீட்டாளா்கள் ரூ.23.83 லட்சம் முதலீடு செய்தனா். ஆனால், உறுதி அளித்தபடி பணத்தை அவா்கள் வழங்கவில்லை. இதையடுத்து முதலீட்டாளா்களில் ஒருவரான திண்டுக்கல் மாவட்டம், பண்ணைப்பட்டியைச் சோ்ந்த வெள்ளிமலை, திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் 2012இல் புகாா் அளித்தாா். இந்த வழக்குப் பின்னா் கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து போலீஸாா், எம்.எஸ்.குமாா் மற்றும் காா்த்திகேயனைக் கைது செய்தனா். இந்த வழக்கு கோவை, தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் இருவா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தமாக ரூ.27.50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதே வழக்குத் தொடா்பாக திண்டுக்கல் மாவட்டம், கம்பளியம்பட்டியைச் சோ்ந்த பொன்னம்மாள் என்பவா் எம்.எஸ்.குமாா், காா்த்திகேயன் ஆகியோா் மீது புகாா் அளித்திருந்தாா். தனியாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கிலும் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி தீா்ப்பளித்தாா்.

இந்த இரு தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்குமாறு தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் எஸ்.மாணிக்கராஜ் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com