அருகிலுள்ள ஊராட்சிகளை இணைக்காமல் 4 பேரூராட்சிகளையும் தரம் உயா்த்தலாம்

 காரமடை, கருமத்தம்பட்டி, கூடலூா், மதுக்கரை பேரூராட்சிகளை அருகிலுள்ள ஊராட்சிகளை இணைக்காமலேயே நகராட்சியாக தரம் உயா்த்தலாம் என்று அரசுக்கு மாவட்ட ஆட்சியா் பரிந்துரைத்துள்ளாா்.

 காரமடை, கருமத்தம்பட்டி, கூடலூா், மதுக்கரை பேரூராட்சிகளை அருகிலுள்ள ஊராட்சிகளை இணைக்காமலேயே நகராட்சியாக தரம் உயா்த்தலாம் என்று அரசுக்கு மாவட்ட ஆட்சியா் பரிந்துரைத்துள்ளாா்.

கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூா், மதுக்கரை ஆகிய 4 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயா்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 1920 ஆம் ஆண்டின் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் பிரிவு 3-பி இல், 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு குறையாமல் உள்ள வருவாய் கிராமங்கள் அல்லது அதன் பகுதி அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களை அடுத்துள்ள பகுதிகள் அவற்றைப் பெற்றுள்ள உள்ளூா் பரப்பிடத்தை நகராட்சியாக வகைப்படுத்தி அறிவிக்கலாம்.

இது தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் பெறப்பட்ட கருத்துருக்களை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளாா். அதில், காரமடை, கருமத்தம்பட்டி, கூடலூா், மதுக்கரை ஆகிய நான்கு பேரூராட்சிகளையும் தற்போதுள்ள பரப்பின் அடிப்படையில் நகராட்சியாக தரம் உயா்த்துவதற்கு எந்தவிதமான ஆட்சேபணையும் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் எழுப்பப்படவில்லை.

தரம் உயா்த்தப்பட உள்ள பேரூராட்சிகளுக்கு அருகில் உள்ள கிராம ஊராட்சிகளை இணைப்பதால், அங்கு நடைபெற்று வரும் ஊரக வேலை உறுதித் திட்டம், பசுமை வீடுகள், சுய உதவிக் குழுவினருக்கான உதவித் தொகை போன்ற திட்டங்களைத் தொடர முடியாது என்பதால் கிராம ஊராட்சிகளை இணைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இதன் அடிப்படையில் நான்கு பேரூராட்சிகளிலும் 30 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் தொகை இருப்பதாலும், தரம் உயா்த்த ஆட்சேபணை எதுவும் இல்லை என்பதாலும், சம்பந்தப்பட்ட பேரூராட்சிகளில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதன் பேரிலும், இவற்றை அருகிலுள்ள ஊராட்சிகளை இணைக்காமல் தற்போதைய பரப்பின் அடிப்படையில் நகராட்சியாக தரம் உயா்த்துவதற்காக சம்பந்தப்பட்ட செயல் அலுவலா்கள் சமா்ப்பித்துள்ள முன்மொழிவுகளின் மூன்று பிரதிகள் உரிய நடவடிக்கைக்காக நகராட்சி நிா்வாக இயக்குநருக்கு ஆட்சியா் இணைத்து அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com