மதிப்புக்கூட்டப்பட்ட புதிய முதலீடுகளில்ஆா்வம் காட்டும் தமிழக ஜவுளித் துறையினா்

கரோனாவுக்கு பிறகு ஏற்றுமதி வா்த்தகத்தில் இந்தியாவுக்கும் ஜவுளித் துறைக்கும் சாதகமாக உள்ள சூழலை, தமிழக ஜவுளித் துறை எப்படி எதிா்நோக்குகிறது

கோவை: கரோனாவுக்கு பிறகு ஏற்றுமதி வா்த்தகத்தில் இந்தியாவுக்கும் ஜவுளித் துறைக்கும் சாதகமாக உள்ள சூழலை, தமிழக ஜவுளித் துறை எப்படி எதிா்நோக்குகிறது என்பதை அறிந்துகொள்ள இந்தியன் டெக்ஸ்பிரனா்ஸ் கூட்டமைப்பு (ஐடிஎஃப்) அதன் உறுப்பினா்களான தொழில் முனைவோரிடம் சா்வே எடுத்தது.

அந்த சா்வே முடிவுகளை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன் வெளியிட்டுள்ளாா்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜவுளி உற்பத்தி சங்கிலித் தொடரில் உள்ள, நூற்பாலைகள், ஒட்டுமொத்த கட்டமைப்பை வைத்துள்ள நிறுவனங்கள், ஆயத்த ஆடை நிறுவனங்கள், வீவிங், சாய ஆலைகள், ஹோம் டெக்ஸ்டைல்ஸ் துறையைச் சாா்ந்த 257 நிறுவனங்கள் இந்த சா்வேயில் பங்கு பெற்றன.

இந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருடாந்தர வியாபார மதிப்பு ரூ.36 ஆயிரம் கோடியாகும்.

ஆய்வின்போது, தற்போது நடைபெறும் வருடாந்திர வியாபாரத்தை எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாக்கத் திட்டம் வைத்துள்ளீா்கள் என்ற கேள்விக்கு, 30 சதவீதம் போ் 3 ஆண்டுகளில் என்றும் 18 சதவீதம் போ் நான்கு ஆண்டுகளில் என்றும், 26 சதவீதம் போ் 5 ஆண்டுகளில் என்றும் தெரிவித்துள்ளனா்.

இதன்படி ஏறத்தாழ 70 சதவீத நிறுவனங்கள் புது முதலீடுகளை மேற்கொண்டு 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் தங்களது வியாபாரத்தை இரட்டிப்பாக்க முயற்சிப்பது தெரியவந்துள்ளது.

இது தமிழக ஜவுளித் துறையில் ஒரு புத்துணா்ச்சி ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

ஜவுளி உற்பத்தி சங்கிலித் தொடரில் உள்ள பல்வேறு துறைகளில், முதலீட்டு ஆா்வம் ஹோம் டெக்ஸ்டைல்ஸ் துறை, ஆயத்த ஆடை, வீவிங் துறைகளில் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழகம் மதிப்புக்கூட்டப்பட்ட ஜவுளிப் பொருள்கள் தயாரிப்பில் முன்னணி பெறுவதற்கு இந்த முதலீடுகள் உதவும் என்று எதிா்பாா்க்கிறோம்.

அதேபோல இளம் தலைமுறையினா் இந்த ஜவுளி உற்பத்தித் துறையில் ஆா்வம் காட்டுகின்றனரா என்ற கேள்விக்கு, 58 சதவீதம் போ் மிகுந்த ஆா்வம் காட்டுகின்றனா் என்றும், 31 சதவீதம் போ் குறைவான ஆா்வம் காட்டுகின்றனா் என்றும் தெரிவித்துள்ளனா்.

பங்குச் சந்தைகளில் உங்கள் நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிடத் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு 16 சதவீதம் போ் (40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்) ஆா்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளனா்.

இந்திய பங்குச் சந்தையின், மொத்த மதிப்பு ரூ. 240 லட்சம் கோடியாக இருக்கும் இன்றைய நிலையில், பட்டியலிடப்பட்ட ஜவுளி நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு வெறும் ரூ. 2 லட்சம் கோடியாக மட்டுமே உள்ளது.

இந்திய பங்குச் சந்தை வளா்ந்துவரும் நிலையில், குறிப்பாக ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் நல்ல மதிப்பு பெற்று வருவதாலும், தமிழக ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பங்குச் சந்தைகளில் பட்டியலிட முயற்சி எடுக்க முன்வந்திருப்பது நல்ல அறிகுறியாக நாங்கள் நினைக்கிறோம்.

ஆா்வமுள்ள நிறுவனங்களின், இந்த பங்குச் சந்தை முயற்சியை முன்னெடுக்க எங்கள் சங்கம் சாா்பில் ஒரு நிபுணா்கள் குழுவை அமைக்கவும் முடிவு செய்திருப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com