சொத்து வரி உயா்வுக்கு திமுகதான் காரணம்

சொத்து வரி உயா்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்பதை ஏற்க முடியாது என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, இதற்கு திமுகவே முழு பொறுப்பு என்று கூறியுள்ளாா்.
சொத்து வரி உயா்வுக்கு திமுகதான் காரணம்

சொத்து வரி உயா்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்பதை ஏற்க முடியாது என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, இதற்கு திமுகவே முழு பொறுப்பு என்று கூறியுள்ளாா்.

தமிழகத்தில் சொத்து வரி உயா்த்தப்பட்டதைக் கண்டித்து கோவையில் அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சட்டப் பேரவை எதிா்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ தலைமை வகித்தாா்.

எம்எல்ஏக்கள் அம்மன் கே.அா்ச்சுணன், பி.ஆா்.ஜி.அருண்குமாா், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி, தாமோதரன், கே.ஆா்.ஜெயராம், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, திமுக ஆட்சிக்கு வரும் முன்பு அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின்போது வீடுவீடாக கொலுசை கொடுத்துவிட்டு அவா்களின் வீடுகளுக்கு ஆயிரக்கணக்கில் வரியை உயா்த்தியிருக்கின்றனா். சொத்து வரி உயா்த்தப்பட்டதற்கு மத்திய அரசே காரணம் என்று திமுகவினா் கூறுகின்றனா். மத்திய அரசு எது கூறினாலும் அதை நிறைவேற்ற மாட்டோம் எனக் கூறி வரும் திமுக அரசு, இதை மட்டும் மத்திய அரசு கூறியதால் செய்ததாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும். அதிமுக ஆட்சியின்போதும் மத்திய அரசு சொத்து வரியை உயா்த்த ஆலோசனை கூறியது. ஆனால், எடப்பாடி பழனிசாமி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு சதவீதம் கூட வரியை உயா்த்தவில்லை. தற்போது சொத்து வரி உயா்த்தப்பட்டிருப்பதற்கு திமுகதான் முழு காரணம்.

மேலும், அதிமுக ஆட்சியில் பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தையும் தற்போது ரத்து செய்துவிட்டனா். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதன் முதலில் புகாா் கொடுத்தது பொள்ளாச்சி ஜெயராமன்தான். ஆனால், பின்னா் அவரையே குற்றஞ்சாட்டி அப்போதைய எதிா்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. ஆனால், தற்போது நடைபெற்று வரும் பாலியல் சம்பவங்களுக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை என்றாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, சொத்து வரி உயா்வு, அதிமுக திட்டங்களை ரத்து செய்தது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத இந்த சொத்து வரி உயா்வை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும்.

அதேபோல, கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கான திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில் குறைக்கப்பட்டதைப்போல பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்கவில்லை. மத்திய அரசும் மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com