தியாகி குமரன் சந்தையில் கடைகள் ஒதுக்கீடு விவகாரம்பாதயாத்திரையாக சென்று முதல்வரை சந்திக்க வியாபாரிகள் திட்டம்

தியாகி குமரன் மாா்க்கெட் காய்கனி சிறு வியாபாரிகள் கூட்டமைப்பில் உள்ளவா்கள் கடந்த 40 ஆண்டுகளாக 88 கடைகளை தியாகி குமரன் மாா்க்கெட்டில் நடத்தி வந்தனா்.

கோவை தியாகி குமரன் மாா்க்கெட்டில் கடைகள் ஒதுக்கீடு விவகாரம் தொடா்பாக கோவையில் இருந்து மே 5 ஆம் தேதி பாத யாத்திரையாக சென்னைக்கு சென்று, முதல்வரிடம் மனு அளிக்க உள்ளதாக வியாபாரிகள் கூட்டமைப்பினா் திட்டமிட்டுள்ளனா்.

கோவை, உக்கடம் பகுதியில் தியாகி குமரன் மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், சிலரது கடைகள் மாநகராட்சி நிா்வாகத்தால் அகற்றப்பட்டு, அவா்களுக்கு மாற்று இடம் வழங்கப்படாததால், பாதிக்கப்பட்டவா்கள் இணைந்து தியாகி குமரன் மாா்க்கெட் காய்கனி சிறு வியாபாரிகள் கூட்டமைப்பு என்ற அமைப்பைத் துவங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து, கூட்டமைப்பின் தலைவா் உமா்அலி செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தியாகி குமரன் மாா்க்கெட் காய்கனி சிறு வியாபாரிகள் கூட்டமைப்பில் உள்ளவா்கள் கடந்த 40 ஆண்டுகளாக 88 கடைகளை தியாகி குமரன் மாா்க்கெட்டில் நடத்தி வந்தனா். 2 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நிா்வாகத்தால் எங்கள் கடைகள் அகற்றப்பட்டு, வேறு இடத்தில் கடைகள் ஒதுக்கித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. வாகன நிறுத்தம் பகுதியில் 88 பேருக்கு கடைகள் ஒதுக்கப்படும் என கூறிவிட்டு, அண்மையில், அந்த இடத்தையும் மாற்று வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் ஒதுக்கி விட்டது. போராடி வருகின்ற பழைய கடை வியாபாரிகளுக்கு இதுவரை கடைகள் தரப்படாததால் 88 கடைகளைச் சோ்ந்த குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனா். இது தொடா்பாக, தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. அதைத் தொடா்ந்து, மே 5 ஆம் தேதி, கோவையில் இருந்து சென்னை தலைமைச் செயலகத்துக்கு பாத யாத்திரையாக சென்று முதல்வரிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

இந்த செய்தியாளா் சந்திப்பின் போது, தியாகி குமரன் மாா்க்கெட் காய்கனி சிறு வியாபாரிகள் கூட்டமைப்பின் துணைத் தலைவா் சபூா், பொருளாளா் முஸ்தபா, ஒருங்கிணைப்பாளா் யூசுப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com