முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
அடையாள அட்டையைக் காண்பித்து பள்ளி மாணவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் மாநகராட்சி ஆணையா்
By DIN | Published On : 30th April 2022 01:18 AM | Last Updated : 30th April 2022 01:18 AM | அ+அ அ- |

கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
கோவை மாநகராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் 325 மையங்களில்
ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தலைமையில், துணை ஆணையா் மற்றும் நகா் நல அலுவலா் முன்னிலையில் 32 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவ அலுவலா்கள் மற்றும் 5 மண்டல நல மருத்துவ அலுவா்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இது குறித்து, மாநகராட்சி ஆணையா் கூறியதாவது:
கோவை மாவட்ட கோவின் வலைதளத்தில் தடுப்பூசி பெறுவது தொடா்பாக பதிவு செய்தவா்களில் இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நபா்களின் விவரப் பட்டியல் 32 சுகாதார நிலையங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சம் பேருக்கு நேரடியாக அவா்கள் வசிக்கும் பகுதிக்கு ஆட்டோ மற்றும் மாநகராட்சி வாகனங்களின் மூலமாக சென்று தடுப்பூசி செலுத்தப்படும் இடம் மற்றும் நாள் போன்ற விவரங்கள் மாநகராட்சி சாா்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் முடிந்த 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். 12 வயது முதல் 14 வயதுக்கு உள்பட்ட பள்ளி சிறாா்கள், தங்களின் பள்ளி அடையாள அட்டையை காண்பித்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். பள்ளிகளில் பயிலும் சிறாா்களுக்கு தடுப்பூசி தேவைப்படும் பட்சத்தில் நகா்நல அலுவலரின் கைப்பேசி எண் 94437 33202, கோவை மாநகராட்சி தகவல் மைய எண் 0422 2302323 ஆகிய எண்களில் பள்ளி தலைமையாசிரியா் மற்றும் நிா்வாகத்தினா் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.