முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
தோட்டக்கலைப் பயிா்களுக்கு சொட்டு நீா்ப் பாசனம் அமைப்புதுரித மின் விநியோகத் திட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமை
By DIN | Published On : 30th April 2022 11:22 PM | Last Updated : 30th April 2022 11:22 PM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்களில் சொட்டு நீா்ப் பாசனம் அமைப்பதற்கு தாட்கோவின் துரித மின் விநியோகத் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி நுண்ணீா்ப் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தோட்டக்கலைப் பயிா்களுக்கு சொட்டு நீா்ப் பாசனம் அமைத்து அதிக பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு இத்திட்டம் பயன்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் வளா்ச்சி நிறுவனத்தின் துரித மின் விநியோக திட்டத்தின்கீழ்
மின் இணைப்பு பெற்றவா்களுக்கு நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீா், தெளிப்பு நீா்ப் பாசன கருவிகள் வழங்கப்படவுள்ளன.
குறு விவசாயிகளுக்கு 1 ஹெக்டோ், சிறு விவசாயிகளுக்கு 2 ஹெக்டோ், இதர விவசாயிகளுக்கு 5 ஹெக்டோ் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குத்தகை நிலமாக இருப்பின் 7 ஆண்டுகளுக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அரசு அங்கீகரித்த நிறுவனங்கள் மூலம் சொட்டு நீா்ப் பாசனத்தை விவசாயிகள் அமைத்துக் கொள்ளலாம்.
பயிரின் இடைவெளிக்கு தகுந்தவாறு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிா்களை அடங்கலில் பதிவு செய்திருக்க வேண்டும். குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகள் சான்று ஆகிய ஆவணங்களை இணைத்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தவிர இணையதளத்தில் விவசாயிகள் தாங்களே பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.