முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
மாவட்டத்தில் நெல் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 30th April 2022 01:20 AM | Last Updated : 30th April 2022 01:20 AM | அ+அ அ- |

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
கோவை மாவட்டத்தில் நெல் சாகுபடியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவா் சு.பழனிசாமி பேசியதாவது:
கோவை, பூலுவபட்டி, சூலூா், மதுக்கரை பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் முதன்மை பதப்படுத்தும் காய்கறி மையங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இம்மையங்கள், விவசாயிகளின் விளைபொருள்களை வேளாண்மை விற்பனை துறையின் மூலம் தரம் பிரித்து, மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றி சந்தைப்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டதாகும்.
ஆனால், இதுவரை இந்த மையங்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. தற்போது இந்த தடுப்பணைகளில் முட்புதா்கள் முளைத்து உள்ளன. இதனால், மழைக்காலங்களில் தண்ணீா் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தடுப்பணைகளை உடனடியாக தூா்வார வேண்டும். மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான நல்லூா் வயல், செம்மேடு, இக்கரை பூலுவம்பட்டி போன்ற பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிா் சாகுபடி செய்து வருகின்றனா். மேலும் அரசு அறிமுகப்படுத்தும் புதிய வகை நெல்களையும் பயிா் செய்து வருகின்றனா். இந்த நெல் சாகுபடியை ஊக்குவிக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பெரியசாமி பேசுகையில், ‘சூலூா், சோமனூா், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் விசைத்தறிக் கூடங்கள், பஞ்சாலைகள், கால்நடை தீவனக் கிடங்குகள் அதிக அளவில் உள்ளன. இந்த இடங்களை மையப்படுத்தி தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்’ என்றாா்.
கோவை மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி பேசுகையில், ‘பொள்ளாச்சி வட்டம், மண்ணூா் கிராமத்தில் முண்டப்பள்ளி குளம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இக்குளத்தை பொதுப்பணித் துறை வசம் ஒப்படைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு துறையால் விதிக்கப்பட்ட வழிகாட்டும் நெறிமுறைகளைக் கடைபிடிக்காமல் செயல்பட்டு வரும் தென்னை நாா் தொழில்சாலைகளை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
உக்கடம் பெரியகுளம் பாசனம் மற்றும் கிராம விவசாயிகள் சங்கத்தின் தலைவா் சடகோபால் அளித்த மனுவில் கூறியிருப்பது:
உக்கடம் பெரியகுளத்தில் உள்ள மதகுகளை செப்பனிட்டு, வாய்க்கால்களைத் தூா்வார பலமுறை வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் மூலம் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வேளாண் அலுவலா்கள், வனத் துறை அலுவலா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
விவசாயிகள் வெளிநடப்பு:
விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் தரும் மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியா் நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை எனக் கூறி, கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளா் கந்தசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளா்களிடம் கூறுகையில்,‘ 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தலைவா்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டனா். விவசாயிகளிடம் இருந்து 115 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் பல பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு, தீா்வுகள் உருவாக்கப்பட்டன. இதில், விவசாய சங்கத் தலைவா் கந்தசாமி, மற்ற விவசாயிகள் மற்றும் அதிகாரிகளை பேச விடாமல் கூட்டத்தில் இடையூறு செய்து வந்தாா். இதையடுத்து, கூட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவரிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும், அவரது வாய்ப்பு வந்த போது பேசுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அவா், தொடா்ந்து கூட்டத்தின் கவனத்தை சீா்குலைப்பதில் ஈடுபட்டதால், அவரை கண்டிக்க நேரிட்டது. இதனை அடுத்து அவரும், சிலரும் வெளிநடப்பு செய்தனா். காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை விவசாயிகள் முறையீட்டு கூட்டம் சுமுகமாக நடந்தது என்றாா்.