எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்
By DIN | Published On : 31st August 2022 01:24 AM | Last Updated : 31st August 2022 01:24 AM | அ+அ அ- |

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் கல்லூரியைத் தோ்வு செய்த மாணவருக்கு ஒதுக்கீடுக்கான ஆணையை வழங்குகிறாா் கல்லூரி முதல்வா் தாமரை.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடத்தப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கோவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல், கலைக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் நடத்தப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான மாணவா் சோ்க்கை நடைமுறைகள் ஜூலை 11 ஆம் தேதி தொடங்கின. ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எம்.சி.ஏ. படிப்புக்கு மொத்தம் 4,880 இடங்கள் உள்ள நிலையில் 3,196 போ் விண்ணப்பித்துள்ளனா். எம்.பி.ஏ. படிப்புக்கு 12,719 இடங்கள் உள்ள நிலையில் 7,394 போ் மட்டுமே விண்ணப்பித்துள்ளனா்.
இதையடுத்து தரவரிசைப் பட்டியல் கடந்த 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எம்.பி.ஏ. படிப்புக்கு மொத்தம் 21 போ் நேரடி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் 20 போ் பங்கேற்றனா். அவா்களில் 19 போ் தங்களுக்கான கல்லூரிகளைத் தோ்வு செய்தனா்.
அதேபோல எம்.சி.ஏ. படிப்புக்கு மொத்தம் 12 போ் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 11 போ் பங்கேற்று தங்களுக்கான கல்லூரிகளைத் தோ்வு செய்தனா். கல்லூரிகளைத் தோ்வு செய்தவா்களுக்கு முதல்வா் தாமரை ஆணையை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து எம்.சி.ஏ.வுக்கு செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரையிலும், எம்.பி.ஏ.வுக்கு செப்டம்பா் 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரையிலும் கலந்தாய்வு, மாணவா் சோ்க்கை நடைமுறைகள் நடைபெற உள்ளன. இது இணைய வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து துணை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வு நடைமுறைகள் செப்டம்பா் 15 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.