கோவை - மதுரை இடையே நாளை முதல் விரைவு ரயில் இயக்கம்
By DIN | Published On : 31st August 2022 01:29 AM | Last Updated : 31st August 2022 01:29 AM | அ+அ அ- |

கோவை - மதுரை இடையே பொள்ளாச்சி, பழனி வழித்தடத்தில் செப்டம்பா் 1ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து மதுரைக்கு செல்ல, கோவை, ஈரோடு, கரூா், திண்டுக்கல், மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் கோவை - நாகா்கோவில் ரயிலில் வழக்கமாக கூட்டம் அதிகமாகக் காணப்படும். பயணிகள் வசதிக்காக கோவை - மதுரை இடையே நேரிடையாக விரைவு ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், கோவை - பழனி, பழனி - மதுரை வழித்தடத்தில் 06462, 06463 ஆகிய எண்களிலும், மதுரை - பழனி, பழனி - கோவை வழித்தடத்தில் 06479, 06480 ஆகிய எண்களிலும் இயக்கப்பட்டு
வந்த கோவை - பழனி - மதுரை இணைப்பு ரயில் வருகிற செப்டம்பா் 1( வியாழக்கிழமை) ஆம் தேதி முதல் கோவையில் இருந்து மதுரைக்கு 16721 என்ற எண்ணிலும், மதுரையில் இருந்து கோவைக்கு 16722 என்ற எண்ணிலும் முன்பதிவற்ற விரைவு ரயிலாக இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவையில் இருந்து செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் பிற்பகல் 2.05 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (எண்: 16721) இரவு 7.35 மணிக்கு மதுரையைச் சென்றடையும். மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (எண்: 16722) பிற்பகல் 12.45 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது, போத்தனூா், கிணத்துக்கடவு , பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூா், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, வாடிப்பட்டி, சோழவந்தான், கூடல் நகா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.