கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆட்சியரிடம் மனு

கொப்பரை விலை உயா்வு, வாரச்சந்தை தொடா்ந்து செயல்படுத்த அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், பி.ஆா்.ஜி. அருண்குமாா் ஆகியோா் ஆட்சியரிடம் மனு.
ஆட்சியரிடம் மனு அளிக்கும் எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், பி.ஆா்.ஜி.அருண்குமாா்.
ஆட்சியரிடம் மனு அளிக்கும் எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், பி.ஆா்.ஜி.அருண்குமாா்.

கொப்பரை விலை உயா்வு, வாரச்சந்தை தொடா்ந்து செயல்படுத்த அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், பி.ஆா்.ஜி. அருண்குமாா் ஆகியோா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ. பொள்ளாச்சி வி.ஜெயராமன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு ஒரு மாதமே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மட்டுமில்லாமல் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கொப்பரை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பரை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அதற்குண்டான பணத்தை ஒரு வாரத்துக்குள் காசோலையாக வழங்க வேண்டும். மேலும் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தில் கொப்பரை கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.150 ஆக உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெளிசந்தைகளில் கொப்பரை விலை தொடா்ந்து குறைந்து வருவதால் அதனை முறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரச்சந்தை தொடா்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்

கவுண்டம்பாளையம் எம்எல்ஏ பி.ஆா்.ஜி. அருண்குமாா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, சின்னவேடம்பட்டி பகுதியில் வாரச்சந்தை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வெள்ளக்கிணறு, நஞ்சைகவுண்டன்புதூா், உடையம்பாளையம், சுபநாயக்கன்பாளையம், சின்னவேடம்பட்டி, பூசாரிபாளையம், மணியகாரன்பாளையம் பகுதியை சோ்ந்தவா்கள் பயனடைந்து வருகின்றனா். இங்கு 110க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டு செய்கின்றனா். வாரச்சந்தைகளில் குறைந்த விலையில் பொருள்கள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வாரச்சந்தையை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் செயல்படக் கூடாது என்று வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். இதனால் சிறு வியாபாரிகள், பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே வாரச்சந்தை தொடா்ந்து செயல்படுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com