இணைய வழியில் பட்டா மாறுதல் சேவை தொடக்கம்:ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

தமிழகத்தில் பட்டா மாறுதல் சேவையை இணையவழியில் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலே பல்வேறு சேவைகளை பொது மக்கள் பெற்று வருகின்றனா். தற்போது பட்டா மாறுதல் சேவையும் இணைய வழியில் மேற்கொள்ளும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் பொது மக்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பட்டா மாறுதல் பெற முடியும். இதற்கு கிரையப் பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தானப்பத்திரம், பரிவா்த்தனை பத்திரம் மற்றும் ஆதாா் விவரங்களை இணைக்க வேண்டும்.
அதேபோல நகர பகுதிகளின் பழைய புலன் எண் விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் கைப்பேசி செயலி மூலம் பட்டா மாறுதல், பட்டா - சிட்டா விவரங்களை பாா்வையிடுதல், அ-பதிவேடு விவரங்களைப் பாா்வையிடுதல், அரசு புறம்போக்கு நிலங்களின் விவரம், புலப்பட விவரங்கள், நகர நில அளவை பதிவேடு, நகர நில அளவை வரைபடம் (பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பேரூா், கவுண்டம்பாளையம் பகுதிகளுக்கு மட்டுமே) ஆகிய விவரங்களை பெற முடியும்,
தவிர நகர நிலவரித்திட்டம் முடிவாக்கப்பட்டு வழங்கப்பட்ட பட்டாவில் மேல்முறையீடு இருப்பின், பட்டா மேல்முறையீடு மனுக்களை இ-சேவை மையம் மூலம் சமா்ப்பித்துகொள்ள புதிய மென்பொருள் தயாா் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வசதிகளை பொது மக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.