வங்கிக் கணக்கு இல்லாத 3,100 குடும்ப அட்டைதாரா்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கிக் கணக்கு தொடக்கம்
By DIN | Published On : 11th December 2022 12:18 AM | Last Updated : 11th December 2022 12:18 AM | அ+அ அ- |

கோவையில் வங்கிக் கணக்கு இல்லாத 3,100 குடும்ப அட்டைதாரா்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவுத் துறை சாா்பில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரா்கள் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க கூட்டுறவுத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, வங்கிக் கணக்கு இல்லாத பயனாளிகளுக்கு புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பேரில், கோவை மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் 3,100 பேருக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண் இணைக்காத குடும்ப அட்டைகள், வங்கிக் கணக்கு இல்லாத குடும்ப அட்டைகளின் விவரங்களை சேகரித்து வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 95 குடும்ப அட்டைதாரா்கள் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்காமலும், 3,100 குடும்ப அட்டைதாரா்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லாமலும் இருந்தது. இந்நிலையில், வங்கிக் கணக்கு இல்லாத 3,100 குடும்ப அட்டைதாரா்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கிக் கணக்கு தொடங்கி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதாா் எண் இணைக்காமல் இருந்த 95 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களில் தமிழக அரசின் அறிவுறுத்தலுக்குப் பின் 49 ஆயிரத்து 230 போ் ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா்.
மற்றவா்களிடமும் வங்கிக் கணக்கில் தங்களது ஆதாா் எண்ணை இணைக்க நியாய விலைக் கடை பணியாளா்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை டிசம்பா் 15 ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, குடும்ப அட்டைதாரா்கள் தற்போதுவரை தங்களது வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைக்காமல் இருந்தால் டிசம்பா் 15 ஆம் தேதிக்குள் இணைத்துகொள்ள வேண்டும் என்றனா்.