முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு: சாலையில் ஓடிய கழிவுநீா்
By DIN | Published On : 07th February 2022 12:14 AM | Last Updated : 07th February 2022 12:14 AM | அ+அ அ- |

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீா் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனா்.
கோவை, காந்திபுரத்தில் இருந்து நஞ்சப்பா சாலை, அவிநாசி சாலை, ரயில் நிலையம் வழியாக உக்கடம் புல்காடு பகுதிக்கு பாதாள சாக்கடைக் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் பாதாள சாக்கடையில் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே ஞாயிற்றுக்கிழமை அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஊழியா்கள், அப்பகுதிக்குச் சென்று பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தனா். இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள தேவாலயம் முன்பு மீண்டும் ஆள் இறங்கு குழியில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் சாலையில் தேங்கியது. மாநகராட்சி ஊழியா்களால் இந்த அடைப்பை சரிசெய்ய முடியவில்லை. இதனால் கழிவு நீா், மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் பகுதிகளில் சாலையில் ஆறாக ஓடியது. அந்த வழியாகச் சென்ற வாகனங்கள், பாதசாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகினா்.
இதைத் தொடா்ந்து, பிற்பகல் 2 மணிக்கு மாநகராட்சி கழிவுநீா் அகற்றும் வாகனம் வரவழைக்கப்பட்டு மாநகராட்சி ஊழியா்கள் பாதாளச் சாக்கடை குழாய் அடைப்பை சரி செய்தனா். அதன் பிறகு, வாகன ஓட்டிகள் நிம்மதியாக சென்றனா்.