முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
ரூ.143 கோடி மதிப்பிலான ராணுவ உதிரி பாகங்கள் தயாரிக்க கொடிசியாவுக்கு மத்திய அரசு அனுமதி
By DIN | Published On : 07th February 2022 04:29 AM | Last Updated : 07th February 2022 04:29 AM | அ+அ அ- |

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.143 கோடி மதிப்பிலான ராணுவ உதிரி பாகங்களைத் தயாரிக்க கோவை கொடிசியாவில் அமைந்துள்ள ராணுவ உதிரிபாக தயாரிப்பு மையத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.143 கோடி மதிப்பிலான ராணுவ உதிரி பாகங்களைத் தயாரிக்க கொடிசியா என்றழைக்கப்படும் கோவை மாவட்ட சிறு தொழிலாளா் சங்கத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு செயலாளா் அஜய் குமாா் தனது ட்விட்டா் பதிவில், ரூ.143.42 கோடி மதிப்பிலான 124 பொருள்களைத் தயாரிக்க கொடிசியாவுக்கு பாதுகாப்பு துறை அனுமதி அளித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தாா்.
இது குறித்து கொடிசியா தலைவா் ரமேஷ் பாபு கூறுகையில், ‘கோவையைச் சோ்ந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் வகையில் முதற்கட்டமாக 124 ராணுவ உதிரி பாகங்களை மத்திய அரசு அடையாளம் காட்டியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இதை தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளோம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடைவா். இதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்பு துறையின் பிரிவான உள்கட்டமைப்பு பிரிவினா் ஏற்படுத்தி தருவா் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.