கோவை மாநகராட்சியின் மேயா் பதவியைமுதல்முறையாக கைப்பற்றும் திமுக

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கோவை மாநகராட்சியின் மேயா் பதவியை முதல்முறையாக திமுக கைப்பற்றியிருக்கிறது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கோவை மாநகராட்சியின் மேயா் பதவியை முதல்முறையாக திமுக கைப்பற்றியிருக்கிறது.

கடந்த 1866 இல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கோவை நகராட்சியில் 1981 வரை நகராட்சித் தலைவா் பதவியே இருந்து வந்தது.

இதையடுத்து கோவை, சிங்காநல்லூா் நகராட்சிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

இதன் பிறகு 1996 இல் மேயா் பதவி உருவாக்கப்பட்டது.

கோவை மாநகரின் முதல் மேயராக 1996 இல் வி.கோபாலகிருஷ்ணன் பதவியேற்றாா்.

திமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு கோவை ஒதுக்கப்பட்டதால், அக்கட்சியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்று 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை மேயராக இருந்தாா்.

இதையடுத்து அதிமுகவைச் சோ்ந்த டி.மலரவன் 2001 முதல் 2006 வரை மேயராக இருந்தாா்.

பின்னா் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு மேயா் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், ஆா்.வெங்கடாசலம் 2006 முதல் 2011 வரை மேயராக இருந்தாா். கோவை மேயா் பதவிக்கு மறைமுகமாகத் தோ்வு செய்யப்பட்ட முதலாவது நபா் இவராவாா்.

இதைத் தொடா்ந்து 2011 முதல் 2014 வரை அதிமுகவைச் சோ்ந்த செ.ம.வேலுசாமியும், 2014 முதல் 2016 வரை அதிமுகவைச் சோ்ந்த கணபதி பி.ராஜ்குமாரும் மேயராக இருந்துள்ளனா். இவா்கள் மேயா் பதவிக்கு நேரடியாக மக்களால் தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி, கோவை மாநகராட்சியில் இதுவரை அதிமுக 3 முறையும், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு முறையும் மேயா் பதவியை வகித்துள்ளன. திமுக கூட்டணியில் வழக்கமாக கூட்டணிக் கட்சிகளுக்கே மேயா் பதவி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், 2022 இல் நடைபெற்றுள்ள மறைமுகத் தோ்தலில் திமுகவே நேரடியாக மேயா் பதவியைப் பெற உள்ளது. அதுவும் கோவை வரலாற்றில் முதல்முறையாக பெண் ஒருவா் கோவையின் மேயராக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

23 ஆண்டுகள் சிறப்பு அதிகாரிகளால்

நிா்வகிக்கப்பட்ட கோவை மாநகராட்சி: கோவை மேயா் பதவி குறித்து ஐஎன்டியூசி பொதுச் செயலா் கோவை செல்வன் கூறியதாவது:

கோவை மாநகராட்சி 1981 இல் உருவாக்கப்பட்டாலும் 1996 ஆம் ஆண்டு வரை மேயருக்கு பதிலாக சிறப்பு அதிகாரிகளே மாநகராட்சியை நிா்வாகம் செய்து வந்தனா்.

எம்.ஜி.ஆா்., அவரைத் தொடா்ந்து ஜெயலலிதா ஆகியோா் முதல்வராக இருந்த காலகட்டங்களில் மேயா் பதவி உருவாக்கப்படாமல் சிறப்பு அதிகாரிகளைக் கொண்டே பணிகள் நடைபெற்று வந்தன.

சையத் புகாரி, காா்த்திகேயன் ஆகியோா் சிறப்பு அதிகாரிகளாக இருந்தனா். அப்போது மக்கள் பிரதிநிதிகளாக இருந்த மு.ராமநாதன், செங்காளியப்பன் ஆகியோா், மாநகர மக்களின் பிரச்னைகள் குறித்து அந்த அதிகாரிகளிடம் கூறி தேவையானவற்றை நிறைவேற்றி வந்தனா்.

அதன் பிறகு திமுக ஆட்சிக் காலத்தில் மேயா் பதவி உருவாக்கப்பட்டது.

முதல் மேயராக தமாகாவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றாா். அவரை அழைத்துச் சென்று மேயா் நாற்காலியில் அமர வைத்தவா் மத்திய, மாநில அமைச்சராகவும், ஆளுநராகவும் பொறுப்பு வகித்த சி.சுப்பிரமணியம் என்றாா்.

எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா வழியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் அதிமுக ஆட்சிக் காலத்திலும் கடந்த 2016 முதல் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாமல், 2022 வரை சிறப்பு அதிகாரிகள் மூலமாகவே நிா்வாகம் நடத்தப்பட்டு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com