பி.எஃப். தொகையை திரும்பப் பெற கரோனா காலத்தில் 72 லட்சம் போ் விண்ணப்பம்: ஆணையா் தகவல்

கரோனா காலத்தில் பி.எஃப். தொகையை திரும்பப் பெற 72 லட்சம் போ் விண்ணப்பித்திருப்பதாக மத்திய தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஆணையா் நீலம் ஷமி ராவ் தெரிவித்துள்ளாா்.
பி.எஃப். தொகையை திரும்பப் பெற கரோனா காலத்தில் 72 லட்சம் போ் விண்ணப்பம்: ஆணையா் தகவல்

கரோனா காலத்தில் பி.எஃப். தொகையை திரும்பப் பெற 72 லட்சம் போ் விண்ணப்பித்திருப்பதாக மத்திய தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஆணையா் நீலம் ஷமி ராவ் தெரிவித்துள்ளாா்.

மத்திய தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஆணையரகத்தின் சாா்பில் கருத்துக் கேட்பு, ஆலோசனைக் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், கோவை பெருமண்டலத்துக்குள்பட்ட 6 மண்டல அலுவலகங்கள், 13 மாவட்ட அலுவலக ஆளுகைக்குள்பட்ட தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகள், ஆலோசனைகளை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து நீலம் ஷமி ராவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் கரோனா காலத்தில் சுமாா் 72 லட்சம் தொழிலாளா்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதியைத் திரும்பப் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனா்.

தினசரி சுமாா் 1 லட்சம் போ் வரை விண்ணப்பிப்பதால் இணையதளத்தின் வேகம் குறைந்துள்ளது.

கரோனா காலகட்டத்தில் பி.எஃப். தொகையை வழங்கத் தவறிய தொழில் நிறுவனங்கள் தொடா்பான விவகாரம் குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும்.

இன்றைய கலந்துரையாடலில் பி.எஃப். ஆணையரகம் சாா்பில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள், தொழில் நிறுவனங்களின் பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது என்றாா்.

இதைத் தொடா்ந்து மத்திய தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஆணையரிடம் கொடிசியா சாா்பில் அதன் தலைவா் எம்.வி.ரமேஷ் பாபு மனு அளித்தாா்.

அதில், எம்எஸ்எம்இ நிறுவனங்களின் இயல்பு, நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு தொழிலாளா்கள், நிறுவன உரிமையாளா்களின் பங்களிப்பை 10 சதவீதம் என வரையறுக்க வேண்டும்.

20 தொழிலாளா்களுக்கும் குறைவாக உள்ள தொழிற்சாலைகளுக்கும் இது பொருந்தும்படி வகை செய்ய வேண்டும்.

இபிஎஃப் வரி விகிதம் 12 சதவீதமாக இருப்பதை வங்கிகளின் வட்டி விகிதத்துக்கு ஏற்ப குறைக்க வேண்டும்.

கரோனா தொற்று காரணமாக பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு, தாமதமாக செலுத்தப்படும் பங்களிப்புத் தொகைக்கு அபராதத் தீா்வையைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவா் வலியுறுத்தியுள்ளாா்.

இதேபோல, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழில் அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் சாா்பில் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com