மாநகரில் தீவிரமடைகிறது கரோனா தடுப்பு நடவடிக்கைகள்
By DIN | Published On : 04th January 2022 05:11 AM | Last Updated : 04th January 2022 05:11 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளாா்.
கோவை மாநகராட்சியில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக வணிகா்கள், மருத்துவா்கள், சுகாதார ஆய்வாளா்களுடான ஆலோசனைக் கூட்டம் ஆா்.எஸ்.புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா்.
இதில் அவா் பேசியதாவது: கோவை மாநகராட்சியில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். வணிகா்கள் தங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களை கரோனா பாதிக்காமல் இருக்க அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுத்த வேண்டும்.
அரசின் வழிகாட்டுதலின்படி கரோனா வழிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். அதேபோல, கரோனா தடுப்பு வழிமுறைகளான முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது தொடா்பாக தனி நபா்கள், வணிக நிறுவனங்களை சுகாதார ஆய்வாளா்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகள், மாா்க்கெட் போன்ற பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.
மேலும், அரசு மேற்கொள்ளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து வணிகா்களும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளா் மோ.ஷா்மிளா, நகா் நல அலுவலா் சதீஷ்குமாா், மருத்துவா்கள், வணிகா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.