முன்களப் பணியாளா்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி: இன்று முதல் செலுத்திக் கொள்ளலாம்
By DIN | Published On : 10th January 2022 01:03 AM | Last Updated : 10th January 2022 01:03 AM | அ+அ அ- |

கோவையில் முன்களப் பணியாளா்கள், 60 வயதிற்கு மேற்பட்டவா்கள் திங்கள்கிழமை (ஜனவரி 10) முதல் மூன்றாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனாா்.
நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றின் 3 ஆவது அலை தீவிரமடைந்துள்ளது. இதனால் மூன்றாவது தவணை கரோனா தடுப்பூசி (பூஸ்டா் டோஸ்) செலுத்துவதற்கு மருத்துவ வல்லுநா்கள் பரிந்துரைத்துள்ளனா். இந்நிலையில் நாடு முழுவதும் மருத்துவத் துறை பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டவா்களில் இணை நோயினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு 3 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணியினை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறாா்.
இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 39 வாரங்கள் அல்லது 9 மாதங்கள் முடிந்தவா்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும். கோவை மாவட்டத்தில் 70 ஆயிரம் பேருக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்களில் தகுதியுள்ள பயனாளிகள் மூன்றாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம். தனியாா் மருத்துவமனைப் பணியாளா்களுக்கு தனியாா் தடுப்பூசி மையங்களில் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தலாம் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.