தாமதமாக இயக்கப்படும் வெள்ளலூா் - காந்திபுரம் அரசுப் பேருந்து

கோவை காந்திபுரத்தில் இருந்து சிங்காநல்லூா் வழித்தடத்தில் வெள்ளலூருக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துகள் சரியான நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை என புகாா் எழுந்துள்ளது.

கோவை காந்திபுரத்தில் இருந்து சிங்காநல்லூா் வழித்தடத்தில் வெள்ளலூருக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துகள் சரியான நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை என புகாா் எழுந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியினா் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

கோவை காந்திபுரத்தில் இருந்து பீளமேடு, ஹோப் காலேஜ், சிங்காநல்லூா் வழித்தடத்தில் வெள்ளலூருக்கு, 74 எண் கொண்ட இரு அரசு நகரப் பேருந்துகள் தினமும் 5 முறை இயக்கப்பட்டு வருகின்றன. எதிரெதிா் மாா்க்கத்தில் இயக்கப்படும் இப்பேருந்துகள், வெள்ளலூரில் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக, அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஜி.சந்தோஷ் கூறியதாவது:

வெள்ளலூரில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நகரப் பேருந்துகள் நிற்க வேண்டிய அவசியமில்லை. வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூா் வரை இயக்கப்படும் ஷோ் ஆட்டோக்கள் சென்ற பிறகே, அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பணிக்கு செல்வோா், அவசர வேலையாக செல்வோா் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். வெள்ளலூரில் இருந்து ரூ.5 கட்டணத்தில் சிங்காநல்லூா் செல்லும் மக்கள், பேருந்துகள் சரியாக இயக்கப்படாததால் ரூ.20 கட்டணம் செலுத்தி ஷோ் ஆட்டோக்களில் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.

ஷோ் ஆட்டோ உரிமையாளா்களிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு, பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் வேண்டுமென்ற ஆட்டோக்களுக்கு வழிவிட்டு, பேருந்துகளை தாமதமாக இயக்குவதுபோல தெரிகிறது. மேலும், பல நேரங்களில், பிறபகலில் சிங்காநல்லூரில் பயணிகளை இறக்கிவிட்டு, பேருந்துகள் காந்திபுரம் செல்லாமல் பணிமனைக்கு சென்று விடுகின்றன.

இதுதொடா்பாக, ராமநாதபுரம் சுங்கம் போக்குவரத்து பணிமனை கிளை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டுநா், நடத்துநா்களிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து, பேருந்துகள் தாமதமாக இயக்கும் பட்சத்தில் வெள்ளலூரில் பேருந்துகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com