அரசுப் பொருள்காட்சியில் குண்டு காயமடைந்த காவலா் சாவு
By DIN | Published On : 17th July 2022 12:53 AM | Last Updated : 17th July 2022 12:53 AM | அ+அ அ- |

காளிமுத்து.
கோவை காந்திபுரம் அரசுப் பொருள்காட்சியில் பணியில் இருந்த காவலா் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை காந்திபுரத்தில் அரசுப் பொருள்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பல துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், போலீஸாா் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஆயுதப்படையில் பணியாற்றும் காவலா் காளிமுத்து (29) அரங்கில் கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கிருந்து குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினா் சென்று பாா்த்தபோது, வயிற்றில் குண்டு காயத்துடன் காளிமுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தாா். அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த காளிமுத்துவுக்கு மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனா். கடந்த 2013 ஆம் ஆண்டு காவலா் பணியில் சோ்ந்த இவா் 2016 ஆம் ஆண்டு முதல் கோவை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தாா்.
தவறுதலாக துப்பாக்கி வெடித்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.