'பெட்ரோல் ஊற்றி கொலை செய்தனர்' - தீக்குளித்து இறந்த பெண் பரபரப்பு வாக்குமூலம்

கோவையில்  37 வயது பெண் தீக்குளித்து  உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, தன் மீது உரிமையாளர் மற்றும் அவரது மனைவி பெட்ரோல் ஊற்றி கொலை செய்ததாக அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
'பெட்ரோல் ஊற்றி கொலை செய்தனர்' - தீக்குளித்து இறந்த பெண் பரபரப்பு வாக்குமூலம்

கோவை:  கோவையில்  37 வயது பெண் தீக்குளித்து  உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, தன் மீது உரிமையாளர் மற்றும் அவரது மனைவி பெட்ரோல் ஊற்றி கொலை செய்ததாக அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி அந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானியில் சேர்ந்த 37 வயது பெண் 10 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். பவானி பகுதியில் செயல்பட்டுவரும் விநாயகா செராமிக்ஸ் கடையில் வேலை செய்து வந்த அந்தப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை ஆர்எஸ் புரம் பகுதியிலுள்ள கடையின் உரிமையாளர் வீட்டின் குளியலறையில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  

இது தொடர்பாக தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முன்னதாக, அந்த இளம்பெண் கடந்த சில நாள்களுக்கு முன்பு தான் பணிபுரிந்து வந்த கடையின் உரிமையாளர் கடந்த 10 ஆண்டுகளாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்ததாகவும், தற்போது தன்னை பெட்ரோல் ஊற்றி கொலை செய்துவிடுவதாக கடை உரிமையாளர் நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் மிரட்டுவதாக விடியோ பதிவு செய்து வைத்திருந்து,  காவல் நிலையத்திற்கு  கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். 

இது தொடர்பாக காவல்துறையினர் அந்த பெண்ணிடம்  நடத்திய விசாரணையில், கடையின் உரிமையாளர் நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா இருவரும்  தன் மீது பெட்ரோல் ஊற்றியதோடு,  தீயை பற்ற வைத்து குளியல் அறைக்குள் தள்ளிவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

அதன்பேரில் இந்த வழக்கை கொலை முயற்சி வழக்காக பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் தலைமறைவான நவநீதன் மற்றும் அகிலா ஆகிய இருவரையும் 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை  கைது செய்யும் வரை, உடலை வாங்க மறுத்துள்ள அந்தப் பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் தனது மகள் வயிற்று வலிக்காக தற்கொலை செய்து கொள்ளவில்லை என கூறியுள்ள அந்தப் பெண்ணின் தாய், கடந்த சனிக்கிழமையன்று தொடர்ந்து நவநீதனின் மனைவி அகிலா, தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி அழைத்ததன் பேரில் தனது மகள்  வந்ததாகவும், கோவை வந்த தனது மகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து 2 மணி நேரம் குளியல் அறையில் அடைத்து வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் தானே வயிற்று வலியின் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறவில்லை என்றால் பெற்றோரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தனது மகளை மிரட்டியதாகவும்  அவரது தாய் தகவல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com