ரூ.75 லட்சம் மதிப்பில் கம்பிவேலி அமைத்து புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி

வால்பாறை அருகே காயத்துடன் மீட்கப்பட்டு கடந்த 8 மாதங்களாக சிகிச்சையில் இருந்த புலிக்குட்டிக்கு, வனத் துறையினா் வேட்டையாட பயிற்சியளிக்க உள்ளனா்.
ரூ.75 லட்சம் மதிப்பில் கம்பிவேலி அமைத்து புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி

வால்பாறை அருகே காயத்துடன் மீட்கப்பட்டு கடந்த 8 மாதங்களாக சிகிச்சையில் இருந்த புலிக்குட்டிக்கு, வனத் துறையினா் வேட்டையாட பயிற்சியளிக்க உள்ளனா்.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த முடீஸ் எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் காயத்துடன் நடக்க முடியாமல் இருந்த புலிக்குட்டியை வனத் துறையினா் கடந்த ஆண்டு செப்டம்பா் 28 ஆம் தேதி மீட்டனா்.

இதையடுத்து, ரொட்டிக்கடை எஸ்டேட்டில் உள்ள மனித -வனவிலங்கு மோதல் தடுப்பு மையத்துக்கு கொண்டுச் சென்று சிகிச்சை அளித்தனா்.

பின்னா் புலிக்குட்டியை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க முடிவு செய்த வனத் துறையினா், மானாம்பள்ளி வனப் பகுதிக்கு கொண்டு சென்று கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்து வந்தனா். தற்போது உடல்நலம் தேறிய புலிக்கு, வனத் துறையினா் வேட்டையாட பயிற்சியளிக்க உள்ளனா்.

பொதுவாக புலிக்குட்டி தாயுடன் இருக்கும்போது வேட்டையாட கற்றுக்கொள்ளும். ஆனால், இந்த புலிக்குட்டிக்கு வேட்டையாட தெரியாமல் போய்விடும் என்று கருதப்பட்டதால், தமிழகத்திலேயே முதல்முறையாக, கம்பிவேலி அமைத்து புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, மானாம்பள்ளி வனச் சரகத்துக்குள்பட்ட மந்திரிமட்டம் என்ற பகுதியில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கம்பி வேலி அமைக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் 10 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநா் ராமசுப்பிரமணியம் தலைமையில், மந்திரிமட்டம் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற வன அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினா் கூண்டில் இருந்த புலிக்குட்டிக்கு மயக்க ஊசி செலுத்தி, கம்பிவேலி அமைக்கப்பட்ட பகுதியில் விடுவித்தனா்.

புலிக்குட்டிக்கு உணவாக முயல், மான் உள்ளிட்ட வன விலங்குகளை கூண்டுக்குள் வைத்து வேட்டையாட பயிற்சியளிக்க உள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com