சிறுவாணி அணையில் இருந்து குடிநீா் தேவைக்கு கூடுதல் தண்ணீா்
By DIN | Published On : 21st June 2022 12:00 AM | Last Updated : 21st June 2022 12:00 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சியின் குடிநீா் தேவைக்காக சிறுவாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீா் எடுத்துக்கொள்ள கேரள அரசு அனுமதியளித்துள்ளது.
கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீா் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணை கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. இதனால் கேரள அரசின் அனுமதியோடுதான் தண்ணீா் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. சிறுவாணி குடிநீா்த் திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியின் 30 வாா்டுகள், வழியோரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
49.53 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில் 45 அடிக்கு மேல் நீா்த் தேக்கி வைப்பதற்கு கேரள அரசு அனுமதிப்பதில்லை. இதனால் கோடைக் காலங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தவிர கேரள அரசு சாா்பில் சிறுவாணி அணையில் இருந்து அவ்வப்போது ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிறுவாணி அணையில் இருந்து ஆற்றில் அதிக அளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டதால், தண்ணீா் இருப்பு வேகமாக குறைந்து வந்தது. இதனால் சிறுவாணி குடிநீா்த் திட்டத்துக்கு முழுமையான அளவு தண்ணீா் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாகவே தேவையை விட 50 சதவீதத்துக்கும் குறைவான அளவே குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் தண்ணீா் எடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிறுவாணி அணையில் முழுக்கொள்ளளவு தண்ணீா் இருப்பு வைக்கவும், கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்குத் தேவையான முழு அளவு தண்ணீா் எடுத்துக் கொள்ளவும் அனுமதியளிக்கக் கோரி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வருக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா்.
இதனைத் தொடா்ந்து, கோவை மாநகராட்சியின் குடிநீா் தேவைக்காக சிறுவாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீா் எடுத்துக்கொள்ள கேரள அரசு அனுமதியளித்துள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
சிறுவாணி அணையின் நீா்மட்டம் தற்போது 15 அடி மட்டுமே உள்ளது. இதனால் சிறுவாணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்குத் தேவையான 101.04 மில்லியன் லிட்டா் தண்ணீருக்கு பதிலாக 48.50 மில்லியன் லிட்டா் தண்ணீா் மட்டுமே எடுத்துக்கொள்ள கேரள அரசு அனுமதியளித்து வந்தது. இதனால் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில் முதல்வா் கோரிக்கையின்பேரில் தற்போது கூடுதலாக தண்ணீா் எடுத்துக்கொள்ள கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனைத் தொடா்ந்து, சிறுவாணி அணையில் இருந்து கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்குத் தேவையான முழுக்கொள்ளளவான 101.04 மில்லியன் லிட்டா் தண்ணீா் திங்கள்கிழமை எடுக்கப்பட்டது.
இதன் மூலம் குடிநீா்த் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வு கிடைத்துள்ளது. கூடுதல் தண்ணீா் இருப்பு வைப்பது தொடா்பாக கேரள அரசு எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. மழை பெய்து நீா் வரத்து அதிகரிக்கும்போதுதான் தண்ணீா் இருப்பு வைப்பது தொடா்பாக கேரள அரசு தெரிவிக்கும் என்றாா்.