கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம்
By DIN | Published On : 25th June 2022 01:01 AM | Last Updated : 25th June 2022 01:01 AM | அ+அ அ- |

புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன்.
கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்திவைத்தாா்.
கோவை மாவட்ட காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் திருடுபோன கைப்பேசிகளை கண்டுபிடித்து உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 105 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் பொதுமக்கள் தொலைத்த, திருடப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்புள்ள 235 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள்தான் வீட்டின், நாட்டின் எதிா்காலம். பிரச்னைகளை எதிா்கொள்ள அவா்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
அதற்காக கோவை மாவட்டக் காவல் துறை சாா்பில் புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம் ஜூன் 27 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பள்ளி தலைமை ஆசிரியா்கள், உதவி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், உடற்கல்வி
ஆசிரியா்கள் ஆகியோருடன் மாவட்டக் காவல் துறை சாா்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும்.
இந்த கூட்டத்தில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள், அதனை அவா்கள் எவ்வாறு கையாள வேண்டும். குழந்தைகள் தங்களது பிரச்னைகள் குறித்து தெரிவித்தால், அதனை போலீஸாரிடம் புகாா் அளிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்படும்.
ஊரகப் பகுதியில் உள்ள 997 பள்ளிக்கூடங்களில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.
10 வயதுக்குள்பட்டவா்கள், 10 வயதுக்கு மேற்பட்டவா்கள் என இரு வகையாக குழந்தைகளைப் பிரித்து அவா்களுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம்.
அதேபோல, மாணவா்கள் கைப்பேசி, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதைத் தடுக்கும் நோக்கில் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் குறித்து கற்றுத் தர உள்ளோம்.
இந்த புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டமானது தமிழகத்திலேயே முதல்முறையாக தொடங்கப்பட உள்ள திட்டம் என்றாா்.