சூலூர் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
By DIN | Published On : 15th March 2022 02:08 PM | Last Updated : 15th March 2022 02:08 PM | அ+அ அ- |

சூலூர்: எஸ்.பி.வேலுமணி கணியூர் கோயிலில் ஒயிலாட்டம் ஆடிய வீடியோ வைரலான நிலையில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் கோவையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சூலூர் அருகே முதலிபாளையத்திலும் சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர் நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்துவருகிறார். கோவை அவினாசி சாலையில் 106 அடி கொடிகம்பம் மிக பிரமாண்டமாக அமைத்தார்.
காலை 6.30 மணிக்கு வந்த 7 லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் கந்தவேல் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து 4 மணி நேரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் வெளியே அதிமுகவினர் 1000-த்திற்கும் அதிகம் கூடியுள்ளனர். கோவை அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் பிரபு ராம். மற்றும் அதிமுகவினர் திரளாக வீட்டின் முன்பு கூறியுள்ளனர்.
சூலூர் வடக்கு ஒன்றியத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் 4 பேர் அமைச்சர் செந்தில்பாலாஜி முயற்சியால் திமுகவிற்கு சென்றனர். இதனால் சூலூர் ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களின் பலம் குறைந்தது குறிப்பிடப்பட்டது. திமுகவுக்கு சென்ற ஒன்றிய உறுப்பினர்கள் கந்தவேலின் மீது அதிருப்தி காரணமாக திமுகவுக்கு சென்றதாக ஒரு தகவல் உள்ளது.
கோவை சரக லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா உத்தரவின் பேரில் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சுலோச்சனா உள்ளிட்ட காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.