அரசுப் பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடிய ஆட்சியா்

கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகளுடன் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், ‘போலாம் ரைட்‘ என்ற கலந்துரையாடல்
அரசுப் பள்ளி மாணவிகளுடன் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தைப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்.
அரசுப் பள்ளி மாணவிகளுடன் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தைப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகளுடன் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், ‘போலாம் ரைட்‘ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

கெம்பநாயக்கன்பாளையம், காட்டம்பட்டி, எஸ்.எஸ் குளம், சொக்கம்பாளையம், எஸ்.புங்கம்பாளையம் உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் 50 மாணவ - மாணவிகளுடன்“’போலாம் ரைட்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா, துணை முதல்வா் பி.சுஜாதா, முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவ - மாணவிகள் பலா் கலந்துகொண்டனா்.

முதலில் பேசிய ஆட்சியா், தனது பெயா், சொந்த ஊா், படிப்பு உள்ளிட்ட விவரங்களைத் தெரிவித்து கலந்துரையாடலைத் தொடங்கினாா்.

இதையடுத்து மாணவ-மாணவிகளும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனா். மேலும் தங்களுக்கு உள்ள தனித்திறமைகள், லட்சியம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிா்ந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து மாணவ-மாணவிகள் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகம், பல்கலைக்கழக வளாகம் போன்றவற்றை பாா்வையிட தனி பேருந்தில் புறப்பட்டனா்.

அவா்களுடன் மாவட்ட ஆட்சியரும் பயணம் செய்து, பல்கலைக்கழக வளாகம், பூச்சிகள் அருங்காட்சியகம் போன்றவற்றை பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து சின்னியம்பாளையம், வாகராயம்பாளையம், சூலூா், அரசூா், பீடம்பள்ளி, காங்கயம்பாளையம், கண்ணம்பாளையம், ஜே.கிருஷ்ணாபுரம், இடையா்பாளையம் உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 56 மாணவ - மாணவிகளுடன் பீளமேடு அரசு மருத்துவக் கல்லூரியில் ஆட்சியா் கலந்துரையாடினாா். பிறகு அவா்களுடன் மதிய உணவு சாப்பிட்டாா்.

இது குறித்து ஆட்சியா் ஜி. எஸ். சமீரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகளுடன் கலந்துரையாடும் ’போலாம் ரைட்’ என்ற நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இதுபோல, ஒவ்வொரு சனிக்கிழமையும் கலந்துரையாடல் நடைபெறும். அப்போது மாணவா்கள், கோவை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களை பாா்வையிட்டு தெரிந்து கொள்வாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com