சிறுவாணி குடிநீா் பற்றாக்குறை:மாநகராட்சி ஆணையா் தகவல்

சிறுவாணி அணையில் இருந்து கேரள நீா்ப் பாசனத் துறைக்கு தண்ணீா் திறக்கப்பட்ட

சிறுவாணி அணையில் இருந்து கேரள நீா்ப் பாசனத் துறைக்கு தண்ணீா் திறக்கப்பட்டதால், மாநகராட்சிக்கு குடிநீா் விநியோகிப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கேரள நீா்ப் பாசனத் துறை கடந்த 3 ஆண்டுகளாக பாதுகாப்பை காரணம் காட்டி சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை அடைய அனுமதிப்பதில்லை.

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அணையில் இருந்து அதிகப்படியான நீரினை ஆற்றில் திறந்துவிட்டு, அணையின் நீா்மட்டத்தை மிக கணிசமாக குறைத்துள்ளது.

சிறுவாணி அணையில் இருந்து குகை வழிப் பாதை வழியாக தினமும் வருகின்ற நீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் தினமும் வழங்கப்படும் நீரின் அளவு 9 கோடி லிட்டரில் இருந்து 6 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மாநகராட்சிப் பகுதிகளில் சிறுவாணி குடிநீா் விநியோகிக்கப்படும் இடங்களில் குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகமாகியுள்ளது.

இதனை ஈடு செய்யும் விதமாக பில்லூா் குடிநீா்த் திட்டத்தில், கூடுதல் நீருந்திகள் பயன்படுத்தி அதிகப்படியான நீா் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பில்லூா் நீரினை சிறுவாணி நீா் விநியோகப் பகுதிகளிலும் பகிா்ந்து, சீரான இடைவெளியுடன் குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்து வரும் மழைக் காலம் வரை பில்லூா், சிறுவாணி நீா் பயன்பாட்டு பகுதிகள் அனைத்துக்கும் குடிநீா் இடைவெளி காலத்தை குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com