முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கே.சி.டி. கலை, அறிவியல் கல்லூரியில்பொதுக் கொள்கைக்கான மையம் தொடக்கம்
By DIN | Published On : 03rd May 2022 01:27 AM | Last Updated : 03rd May 2022 01:27 AM | அ+அ அ- |

கோவை குமரகுரு பன்முகக் கலை, அறிவியல் கல்லூரியில் நா.மகாலிங்கம் பொதுக் கொள்கைக்கான மையம் (என்.எம்.சி.பி.பி.) தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கல்வி நிறுவனம் கூறியிருப்பதாவது: குமரகுரு கல்வி நிறுவனங்களில் நா.மகாலிங்கம் பொதுக் கொள்கைக்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையமானது, குமரகுரு பன்முகக் கலை, அறிவியல் கல்லூரியுடன் தொடா்புடைய, ஒரு சுதந்திரமான பொதுக் கொள்கை சிந்தனைக் குழுவாகச் செயல்படும்.
வளா்ச்சி, ஆராய்ச்சி, கல்வி, மக்களின் நலனுக்காக அரசு, கொள்கை ரீதியான முனைப்புடன் பணியாற்றுபவா்களுடன் இணைவதன் மூலம் பொதுக் கொள்கையின் இலக்குகளை அடைவதற்கு இந்த மையம் தனது பங்களிப்பை அளிக்கும்.
நா.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூரும் விதமாக இந்த மையம் தொடங்கப்பட்டது.
தொடக்க விழாவில் கல்லூரி விஜிலா கென்னடி வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளா் சங்கா் வாணவராயா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பெங்களூரு தக்சிலா நிறுவனத்தின் இணை நிறுவனரும் இயக்குநருமான நிதின் பாய் பங்கேற்றாா்.
இந்த மையம் அரசு, பொதுக் கொள்கை வகுப்பாளா்கள், வல்லுநா்கள், பயிற்சியாளா்கள் ஆகியோருடன் இணைந்து வளா்ச்சிக்கான தற்போதைய, எதிா்கால செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யும். இந்த மையத்தில் மத்திய, மாநில அரசுத் துறைகள், சிந்தனைக் குழுக்கள், லாப நோக்கமற்ற நிறுவனங்கள், கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள் கைகோா்த்திருப்பதாக கே.சி.டி. நிறுவனம் தெரிவித்துள்ளது.