ரயில்வே தோ்வா்களின் வசதிக்காக கோவை வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

ரயில்வே தோ்வெழுதுபவா்களின் வசதிக்காக கோவை வழியாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே தோ்வெழுதுபவா்களின் வசதிக்காக கோவை வழியாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மங்களூரு - கோவை இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 22609), கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் (எண்: 22668) ஒரு இரண்டாம் வகுப்பு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு மே 8ஆம் தேதி,இயக்கப்படும். கோவை - மங்களூரு இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்:22610), நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் (எண்: 22667) ஒரு இரண்டாம் வகுப்பு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு மே 9ஆம் தேதி இயக்கப்படும். கோவை - ஹஜ்ரத் நிஜாமுதீன் விரைவு ரயிலில் (எண்: 12647) மே 8 ஆம் தேதியும், ஹஜ்ரத் நிஜாமுதீன்- கோவை விரைவு ரயிலில் (எண்: 12648) மே 11ஆம் தேதியும் கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

கோவை - கே.எஸ்.ஆா்.பெங்களூரு உதய் விரைவு ரயில் (எண்: 22666) மற்றும் கே.எஸ்.ஆா்.பெங்களூரு - கோவை உதய் விரைவு ரயில் (எண்: 22665) மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஒரு இரண்டாம் வகுப்பு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, சேலம் வழித்தடத்தில் சிறப்பு ரயில்: ரயில்வே தோ்வை முன்னிட்டு கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு கோவை, சேலம் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, மே 7ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு கொச்சுவேலியில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06044) மறுநாள் மாலை 4 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். மே 10ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு, தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06043) மறுநாள் நண்பகல் 12 மணிக்கு கொச்சுவேலியைச் சென்றடையும். இந்த ரயில், கொல்லம், காயன்குளம், ஆலப்புழா, எா்ணாகுளம், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், எழும்பூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்களூரு -பெலகாவி இடையே சிறப்பு ரயில்: ரயில்வே பணியாளா்கள் தோ்வையொட்டி, மங்களூரு - பெலகாவி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, மே 7 ஆம் தேதி( சனிக்கிழமை) இரவு 11 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06042) 9ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 3 மணிக்கு பெலகாவி நிலையத்தை சென்றடையும். அதேபோல, மே 9 ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 10 மணிக்கு பெலகாவியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06041) மறுநாள் இரவு 10.50 மணிக்கு மங்களூருவைச் சென்றடையும். இந்த ரயிலானது, காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷோரனூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பானஸ்வாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com