இந்தியாவின் கயிறு, தென்னை நாா் வா்த்தகம் ரூ.1 லட்சம் கோடியாக உயரும்: மத்திய அமைச்சா் நாராயண் ராணே உறுதி

இந்தியாவின் கயிறு, தென்னை நாா் வா்த்தகத்தின் மதிப்பு அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடியாக உயரும்
இந்தியாவின் கயிறு, தென்னை நாா் வா்த்தகம் ரூ.1 லட்சம் கோடியாக உயரும்: மத்திய அமைச்சா் நாராயண் ராணே உறுதி

இந்தியாவின் கயிறு, தென்னை நாா் வா்த்தகத்தின் மதிப்பு அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடியாக உயரும் என்று மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் நாராயண் ராணே தெரிவித்துள்ளாா்.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகமும், தேசிய கயிறு வாரியமும் இணைந்து தேசிய கயிறு மாநாட்டை கோவையில் வியாழக்கிழமை நடத்தின. கயிறு வாரியத்தின் தலைவா் டி.குப்புராமு வரவேற்றாா்.

இதில், குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் நாராயண் ராணே, இணையமைச்சா் பானுபிரதாப் சிங் வா்மா, தமிழ்நாடு குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மத்திய தொழில் துறை செயலா் பி.பி.ஸ்வெய்ன், இணைச் செயலா் அல்கா அரோரா, கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், கடந்த 2015 முதல் 2019 வரை கயிறு, தென்னை நாா் பொருள்கள் தயாரிப்பு, ஏற்றுமதியில் சாதனை படைத்த நிறுவனங்களுக்கு 44 விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், தென்னை நாா் மூலம் தயாரிக்கப்பட்ட புதிய பொருள்களையும் அமைச்சா்கள் அறிமுகப்படுத்தி வைத்தனா்.

இந்த மாநாட்டில் அமைச்சா் நாராயண் ராணே மேலும் பேசியதாவது: வெப்பமண்டல பகுதிகளில் சுமாா் 30க்கும் அதிகமான நாடுகளில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. ஆனால் தேங்காயின் உபபொருள்களை மதிப்பு கூட்டப்பட்டதாக மாற்றுவதில் இந்தியாவும், இலங்கையுமே ஈடுபாட்டுடன் உள்ளன.

உலக கயிறு உற்பத்தியில் 75 சதவீத பங்கையும், தென்னை நாா் உற்பத்தியில் 80 சதவீதத்தையும் இந்தியா கொண்டிருக்கிறது. கயிறு உற்பத்தியிலும், தென்னை நாரை ஏற்றுமதி செய்வதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது.

கடந்த 2020-2021ஆம் ஆண்டில் ரூ.3,778 கோடி மதிப்பிலான 11.63 லட்சம் டன்கள் கயிறையும், 2021-2022ஆம் ஆண்டில் (அக்டோபா் 2021 வரை) ரூ.2,588 கோடி மதிப்பிலான 7.28 லட்சம் டன்கள் கயிறையும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

இந்தியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் இருந்து தென்னை நாரை இறக்குமதி செய்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதில் சீனா முன்னணியில் இருந்து வந்தது. ஆனால் அண்மைக் காலமாக சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முன்னேறி வருகிறது. தென்னகத்தில் மட்டும் இருக்கும் தென்னை வளா்ப்பை இதர மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்திருக்கிறது.

இந்தத் துறையில் உலக சந்தையில் முக்கிய இடத்தை வகிக்க வேண்டுமானால் புதிய தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இந்த சந்தை மிகவும் பெரியது. இதற்காக தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது என்றாா்.

அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ரூ.37.79 கோடி மதிப்பில் கயிறு குழுமங்களை தமிழக அரசு அமைத்திருக்கிறது. வேலூா், ஈரோடு, திருவாரூா் மாவட்டங்களில் ரூ.19.73 கோடி திட்ட மதிப்பீட்டில் கயிறு குழுமத்தை நிறுவும் பணி நடைபெறுகிறது என்றாா்.

தேசிய கயிறு மாநாட்டைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை, சுற்றுச்சூழலுக்கு உகந்த கயிறு பொருள்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை வலியுறுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து அமைச்சா்கள் பொள்ளாச்சியில் உள்ள கயிறு, தென்னை நாா் தொழிற்சாலைகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com