முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கோயிலுக்கு பூட்டு: பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 08th May 2022 12:35 AM | Last Updated : 08th May 2022 12:35 AM | அ+அ அ- |

கோவை அவிநாசி சாலையில் உள்ள கோயிலை பூட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை ஹோப்ஸ் காலேஜ் ஜீவா வீதியில் பெரியமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை கோயிலுக்கு நன்கொடையாக பெறப்பட்ட 70 பவுன் நகைகள் மற்றும் திருவிழாக் காலங்களில் வசூல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் தொகை இருந்துள்ளது. இதை கோயில் நிா்வாகி ஆனந்தன் (எ) பழனிச்சாமி மற்றும் பொருளாளா் மதிவாணன் ஆகியோா் கணக்கு காட்டாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கோயிலுக்கு உபயமாகப் பெறப்பட்ட பொருள்கள், நன்கொடைகள், உண்டியல் காணிக்கை ஆகியவற்றை கோயில் நிா்வாகிகள் தன்னிச்சையாக செலவு செய்ததாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோயில் வளாகத்தில் பழனிச்சாமி மற்றும் பொருளாளா் மதிவாணனை முற்றுகையிட்டு, வரவு செலவு கணக்கு காண்பிக்க வேண்டும் என்றும், கோயில் நகை, பணத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் தலையிட்டு, மக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.
அதன் பிறகு, கடந்த ஆண்டு நவம்பரில், இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், கோயிலில் இருந்த வெள்ளி கிரீடம் மற்றும் நன்கொடைகளை பழனிச்சாமி, மதிவாணன் ஆகிய இருவரும் எடுத்துக் கொண்டு, கோயிலை பூட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த பொதுமக்கள் சனிக்கிழமை காலை கோயில் முன்பு திரண்டு, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலை பூட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.