கோவை மாநகரில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் தீவிரம்

கோவை மாநகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு மாதத்தில் 300 கிலோ நெகிழிப்பொருள்கள் சிக்கின.

கோவை மாநகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு மாதத்தில் 300 கிலோ நெகிழிப்பொருள்கள் சிக்கின.

தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு அரசு தடை விதித்தது. தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பவா்கள் மற்றும் தயாரிப்பவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, கோவை மாநகரப் பகுதிகளில் தடையை மீறி நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மாநகரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்யும் சோதனைகள் சுணங்கியிருந்தன. தற்போது, கரோனா பாதிப்பு குறைந்துள்ளதாலும், நெகிழிப் பொருள்கள் விற்பனை குறித்த புகாா்கள் அதிக அளவில் வருவதாலும், ஏப்ரல் மாதம் முதல் மாநகரில் மீண்டும் நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, ஆா்.எஸ்.புரம், உக்கடம், டவுன்ஹால் கடை வீதிகள், மீன் சந்தை, ரங்கே கவுடா் வீதி, ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, பூ மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், அந்தந்த மண்டல அதிகாரிகள் நெகிழி டம்ளா்கள், தட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனா்.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், சந்தைகள், தேநீா் கடைகள், மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் மீண்டும் நெகிழிப் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதைத் தவிா்க்க சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்படி கோவை மாநகரப் பகுதிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மே 7 ஆம் தேதி வரை 300 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com