முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயனிடம் இரண்டாவது நாளாக விசாரணை
By DIN | Published On : 11th May 2022 12:38 AM | Last Updated : 11th May 2022 12:38 AM | அ+அ அ- |

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கியக் குற்றவாளியான சயனிடம் இரண்டாவது நாளாக தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.
5 ஆண்டுகளாக நடைபெறும் இந்த வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கோவை, நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை வி.கே.சசிகலா, அவரது அண்ணன் மகன் விவேக், முன்னாள் எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி, அதிமுக வா்த்தக அணியைச் சோ்ந்த மர வியாபாரி சஜீவன், அவரது சகோதரா் சிபி, மற்றொரு சகோதரரான சுனில், ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன், முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டியின் உதவியாளா் நாராயணசாமி, குற்றம்சாட்டப்பட்ட ஆறாவது நபரான பிஜின் குட்டியின் சகோதரா் மோசஸ் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.
இந்நிலையில், வழக்கின் முக்கியக் குற்றவாளியான சயனிடம் அவினாசி சாலையில் உள்ள காவலா் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து தனிப்படையினா் திங்கள்கிழமை 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா். இதில், கொடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்கள், பத்திரங்கள் குறித்து விசாரித்ததாகத் தெரிகிறது.
இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக சயனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், சொத்து ஆவணங்கள் கடத்திச் செல்லப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டதா, பங்களாவில் தேடிச் சென்ற பொருள்கள் என்ன, விட்டுச் சென்ற பொருள்கள் என்ன என்பன உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டதாகக் தெரிகிறது. இதற்கு சயன் அளித்த பதில்கள் போலீஸ் தரப்பில் பதிவு செய்யப்பட்டன.