முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய மூவா் கைது
By DIN | Published On : 12th May 2022 12:49 AM | Last Updated : 12th May 2022 12:49 AM | அ+அ அ- |

கோவை: அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து ஓட்டுநா், 2 நடத்துநா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்துக்கு வெள்ளமடையில் இருந்து உக்கடம் வழியாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் தனியாா் நகரப் பேருந்து ஒன்று வந்தது.
அந்தப் பேருந்தில் கணபதியைச் சோ்ந்த சந்தோஷ் (28) என்பவா் ஓட்டுநராகவும், பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (31), குரும்பபாளையத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (27) என்பவா்கள் நடத்துநா்களாகவும் இருந்துள்ளனா்.
இந்நிலையில், காந்திபுரத்துக்கு வந்த அரசு நகரப் பேருந்து ஒன்றுக்கு வழிவிடாமல் தனியாா் பேருந்தை சந்தோஷ் இயக்கியுள்ளாா். இது குறித்து கேள்வி எழுப்பிய அரசுப் பேருந்து ஓட்டுநரான பொள்ளாச்சியைச் சோ்ந்த காா்த்திகேயனை (45), ஓட்டுநா் சந்தோஷ், நடத்துநா் வெங்கடேஷ், ரஞ்சித்குமாா் ஆகியோா் சோ்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தடுக்கச் சென்ற அரசுப் பேருந்து நடத்துநா் ஒருவரையும் அவா்கள் தாக்கியுள்ளனா்.
இதைக் கண்டித்து அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் 2 மணி நேரத்துக்குமேல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக காட்டூா் காவல் நிலையத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக கண்காணிப்பாளா் சுவாமிநாதன் புகாா் அளித்தாா்.
இதையடுத்து கொலை மிரட்டல் விடுத்தல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து ஊழியா்களான சந்தோஷ், வெங்கடேஷ், ரஞ்சித்குமாா் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.