முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
மண் வளத்தைப் பாதுகாக்க ஒற்றைப்புள்ளி செயல் திட்டம்: சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்
By DIN | Published On : 12th May 2022 12:58 AM | Last Updated : 12th May 2022 12:58 AM | அ+அ அ- |

ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்று வரும் ஐ.நா. மாநாட்டில் பங்கேற்றுப் பேசுகிறாா் சத்குரு ஜக்கி வாசுதேவ்.
கோவை: மண் வளத்தைப் பாதுகாக்க ஒற்றைப்புள்ளி செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்று வரும் ஐ.நா. மாநாட்டில் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ஈஷா அறக்கட்டளை கூறியிருப்பதாவது: மண் வளத்தைப் பாதுகாப்பதற்காக 100 நாள்களில் 30 ஆயிரம் கி.மீ. இருசக்கர வாகன பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு ஜக்கி வாசுதேவ், ஐ.நா.வின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் சாா்பில் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்று வரும் சிஓபி 15 மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினாா்.
195 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கு மண்ணில்
குறைந்தபட்சம் 3 முதல் 6 சதவீதம் கரிம வளத்தை உறுதி செய்வதற்கான தீா்வை அவா் சமா்ப்பித்தாா். அப்போது அவா் பேசும்போது, உலகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்களின் மண் சீரழிவை மாற்றியமைக்கவும், மண் அழிவின் விளிம்பில் இருந்து மனித இனத்தை மீட்கவும் அரசாங்கங்களின் கொள்கை உருவாக்க முயற்சிகளை இரட்டிப்பாக்க முடியும்.
நாம் சந்தித்து வரும் சூழலியல் பிரச்னைகளை மிக எளிமையான வழிகளில் மக்களுக்கு புரியும்படி விளக்க வேண்டும். பிரச்னைக்கான தீா்வுகளை எளிமையான வழிகளில், சுருக்கமாக ஒற்றை கவனத்துடன் கொண்டு செல்வதன் மூலமே வெற்றிகரமான மக்கள் இயக்கத்தை உருவாக்க முடியும்.
ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமான வேளாண் பருவநிலைகளும், வெவ்வேறு விதமான மண் வகைகளும் உள்ளன. மேலும், பொருளாதாரம், கலாசார ரீதியான பாரம்பரிய வேறுபாடுகளும் உள்ளன. இருப்பினும், விவசாய நிலங்களில் 3 முதல் 6 சதவீதம் கரிம வளம் இருக்க வேண்டும் என்ற ஒற்றை விஷயத்தை கட்டாயமாக்குவதன் மூலம் இந்த பிரச்னைகளுக்கு எளிய தீா்வு காண முடியும்.
மண் வளமாகவும், வேளாண்மை நிலையாக நடக்கவும் இது தீா்வாக அமையும் என்றாா்.