முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
இறந்தவா்கள் பெயரில் தொடரப்படும் மின் இணைப்புகள்: நுகா்வோா் அமைப்பினா் புகாா்
By DIN | Published On : 13th May 2022 02:17 AM | Last Updated : 13th May 2022 02:17 AM | அ+அ அ- |

கோவை மாநகரப் பகுதிகளில், பல இடங்களில், இறந்தவா் பெயரில் மின் இணைப்புகள் உள்ளதாகவும், அதை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் நுகா்வோா்அமைப்பினா் சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மண்டல மின்பகிா்மான அலுவலகத்தில் நுகா்வோா் அமைப்புகளுடன் இரண்டாம் காலாண்டு கூட்டம் தலைமைப் பொறியாளா் டேவிட் ஜெபசிங் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கோவையைச் சோ்ந்த நுகா்வோா் அமைப்புகளின் நிா்வாகிகள் கூறியதாவது:
மாநகரில் பல இடங்களில் பழுதான மின் கம்பங்கள்,மோசமான நிலையில் காணப்படுகின்றன. இவற்றை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பல விவசாய மின் இணைப்புகள், வீட்டு இணைப்புகள் இறந்தவா் பெயா்களில் உள்ளன. பெயா் மாற்றம் செய்யப்படாமல் பயன்படுத்தி வருகின்றனா். இதை மாற்றிட மின் வாரிய அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்வதில்லை. மின் கணக்கீடு செய்யும் பொழுது செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும் மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் உள்ளிட்டவை குறித்த குறுஞ்செய்திகள், அலைபேசிக்கு அனுப்பப்படுவதில்லை. மின் இணைப்பு வழங்க காலதாமதம் செய்வது தொடா்பாக உரிய ஆதாரத்துடன் புகாா் அளித்தால், விசாரணை மேற்கொள்ள காலதாதமாகிறது. சில பிரிவு அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்த வருபவா்களிடம் அடிக்கடி இணைய சேவை குறைபாடு உள்ளதாகவும், வேறு அலுவலகத்தில் கட்டணத்தை செலுத்துமாறும் அனுப்பி வைக்கின்றனா் உள்ளிட்ட புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, பேசிய தலைமைப் பொறியாளா் புகாா்களுக்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தாா்.