முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
அந்நிய செலாவணி மோசடி வழக்கு: தனியாா் மருத்துவமனை உரிமையாளரிடம் 2ஆவது நாளாக சிபிஐ விசாரணை
By DIN | Published On : 13th May 2022 02:13 AM | Last Updated : 13th May 2022 02:13 AM | அ+அ அ- |

அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடா்பாக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனை உரிமையாளரிடம் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை விசாரணையைத் தொடா்ந்தனா்.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நன்கொடைகளை வசூலிப்பதில் முறைகேடு நடைபெறுவது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தில்லி, ஜாா்க்கண்ட், ஹரியாணா, ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம், தமிழ்நாடு, அஸ்ஸாம், மணிப்பூா், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் 40 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனா்.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், சேனாதிபதிபாளையம் பகுதியைச் சோ்ந்த, தொண்டு நிறுவனம் நடத்தி வரும் வாகேஷ் (31) என்ற பட்டயக் கணக்காளரை அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இவா் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தில் பட்டயக் கணக்காளராக உள்ளாா். இந்தத் தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு பணப் பரிவா்த்தனைக்கான அனுமதியை நீட்டித்து தருவதற்கு தில்லியைச் சோ்ந்த உள்துறை அமைச்சக அதிகாரி பிரமோத் குமாா் பாசின் என்பவருக்கு ரூ.2 லட்சம் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது.
லஞ்சம் வழங்கப்பட்டதில் தனியாா் மருத்துவமனை உரிமையாளா் ராஜசேகருக்குத் தொடா்பு இருப்பதாக வாகேஷ் தெரிவித்ததையடுத்து அவரிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினா். இதன் தொடா்ச்சியாக ராஜசேகரிடம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.