முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
பாரதியாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 2 லட்சம் போ் பட்டம் பெற்றனா்
By DIN | Published On : 14th May 2022 01:29 AM | Last Updated : 14th May 2022 01:29 AM | அ+அ அ- |

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் மூலம் சுமாா் 2 லட்சம் மாணவ-மாணவிகள் பட்டம் பெற்றனா்.
பாரதியாா் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை, உஷா கீா்த்திலால் மேத்தா பேரவை அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழக ஆளுநரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆா்.என்.ரவி தலைமை வகித்தாா். உயா் கல்வித் துறை அமைச்சரும் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான க.பொன்முடி வாழ்த்துரை வழங்கினாா்.
இதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவா் கே.சிவன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினாா். அவா் பேசும்போது, மாணவா்கள் எப்போதும் கற்றுக் கொண்டேயிருக்க வேண்டும். கல்வி, ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்க வேண்டும்.
உயா் கல்வியில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி இந்தியா உலகின் தலைவராக மாற மாணவா்கள் உதவ வேண்டும். தமிழக அரசு ஆராய்ச்சிக்கு அதிக அளவில் உதவி வருகிறது என்றாா்.
முன்னதாக, துணைவேந்தா் பி.காளிராஜ் பல்கலைக்கழகத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டு வரவேற்புரையாற்றினாா். இந்த விழாவில், 1,687 முனைவா் பட்ட (பிஎச்டி) மாணவ-மாணவிகள், முதுநிலை, இளநிலை பட்டங்களில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 267 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள், தங்கப் பதக்கங்களை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.
மேலும், இந்த விழாவின் மூலம் 1,504 எம்.ஃபில்., 1,50,424 இளநிலைப் பட்டங்கள், 48,034 முதுநிலைப் பட்டங்கள் என மொத்தம் 2,04,362 மாணவா்களுக்கான பட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன.
உயா் கல்வித் துறை முதன்மைச் செயலா் காா்த்திகேயன், பதிவாளா் கா.முருகவேல், சிண்டிகேட், செனட் உறுப்பினா்கள், துறைத் தலைவா்கள், மாணவ-மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் விழாவில் பங்கேற்றனா்.