முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கோவை - புதுதில்லி சரக்கு ரயில் சேவை இன்று முதல் மீண்டும் துவக்கம்
By DIN | Published On : 14th May 2022 01:28 AM | Last Updated : 14th May 2022 01:28 AM | அ+அ அ- |

கோவை - புதுதில்லி இடையேயான சரக்கு ரயில் சேவையை, சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் கௌதம் ஸ்ரீனிவாஸ் சனிக்கிழமை கொடியசைத்து துவக்கிவைக்கிறாா்.
கோவை வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து புதுதில்லி படேல் நகருக்கு ஒப்பந்த அடிப்படையில், தனியாா் நிறுவனம் மூலமாக கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சரக்கு விரைவு ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இதில் முகக்கவசங்கள், துணிகள், மருந்துகள், காய்கறி, பழங்கள் அதிக அளவில் கொண்டுச் செல்லப்பட்டன.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக சில மாதங்களாக இந்த ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்த சரக்கு ரயிலை இயக்கி வந்த நிறுவனத்துடன் ரயில்வே நிா்வாகம் ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தம் நிறைவடைந்துள்ள நிலையில், வேறு நிறுவனம் மூலமாக கோவை - புதுதில்லி சரக்கு விரைவு ரயிலானது, ஒப்பந்த அடிப்படையில் சனிக்கிழமை (மே 14) முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. 15 பெட்டிகள் கொண்ட இந்த சரக்கு ரயில் சேவையை, சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் கௌதம் ஸ்ரீனிவாஸ் கொடியசைத்து துவங்கிவைக்கிறாா். மாதம் இருமுறை இயக்கப்படும் இந்த ரயிலானது, சனிக்கிழமை காலை 10 மணிக்கு கோவை வடகோவை ரயில் நிலையத்தில் புறப்பட்டு, திருப்பூா், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா, நாகபுரி வழித்தடத்தில் புதுதில்லியை திங்கள்கிழமை இரவு சென்றடையும். அங்கிருந்து புதன்கிழமை காலை 6 மணிக்குப் புறப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு கோவை நிலையத்தை ரயில் வந்தடையும்.