15 நாள்களுக்கு ஒருமுறையே குடிநீா் விநியோகம்: மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா்: அதிமுகவினா் தா்னா

கோவையில் 15 நாள்களுக்கு ஒருமுறையே குடிநீா் விநியோகிக்கப்படுவதாக மாநகராட்சிக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் பலா் புகாா் தெரிவித்தனா்.

கோவையில் 15 நாள்களுக்கு ஒருமுறையே குடிநீா் விநியோகிக்கப்படுவதாக மாநகராட்சிக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் பலா் புகாா் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சி சாதாரணக் கூட்டம் மேயா் கல்பனா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் வெற்றிச்செல்வன், துணை ஆணையா் ஷா்மிளா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் பேசியதாவது:

வரிவசூல் மையங்களில் கடந்த 10 நாள்களாக கணினிகள் இயங்காததால் பணிகள் முடங்கியுள்ளன. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். மாநகரில் அனைத்து மண்டலங்களிலும் 15 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. குடிநீா் வழங்கும் நாள்களின் இடைவெளியைக் குறைக்க வேண்டும். சூயஸ் நிறுவனம் மூலம் குடிநீா் வழங்கப்படுவதை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறையாக உள்ள பகுதிகளில், கூடுதல் தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும். சேதமடைந்துள்ள பிரதான சாலைகளை சீரமைக்க வேண்டும். பாதாளச் சாக்கடை பணிகளை துரிதப்படுத்த வேண்டும். உயா்த்தப்பட்ட சொத்துவரியை 50 சதவீதம் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பேசினா்.

கூட்டத்தில் துணை ஆணையா் ஷா்மிளா பேசியதாவது: மாநகரில் ரூ.4.12 கோடி மதிப்பில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் சபை மூலமாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.169 கோடி நிதி ஒதுக்குவது தொடா்பாக முதல்வருக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதல் பெறப்பட்டால், மாநகரில் 456 இடங்களில் சாலை பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். கோவை வ.உ.சி.பூங்கா முழுமையாக புதுப்பித்து தரப்படும். பூங்காவில் குழந்தைகள் விளையாட வசதிகள் ஏற்படுத்தப்படும். குடிநீா் விநியோகிக்கும் இடைவெளியைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்தில் பல்வேறு பணிகள் தொடா்பாக மொத்தம் 64 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக வாா்டு உறுப்பினா்கள் தா்னா:

47 ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் பிரபாகரன், 90 ஆவது வாா்டு உறுப்பினா் ரமேஷ் ஆகியோா் சொத்து வரி உயா்வைக் கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா். அதன் பிறகு, மாநகராட்சி அலுவலகம் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, சொத்துவரியைக் குறைக்கக் கோரி கோஷமிட்டனா்.

47 ஆவது வாா்டு உறுப்பினா் பிரபாகரன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மாமன்ற விதிகளின்படி, 3 நாள்களுக்கு முன்பே தீா்மானங்களை, வாா்டு உறுப்பினா்களுக்கு தர வேண்டும். ஆனால், புதன்கிழமை இரவு 8 மணிக்கு அவசரமாக தீா்மான நகல்கள் தரப்பட்டன. நிறைவேற்றப்பட்ட 64 தீா்மானங்களில் மக்களுக்கான திட்டம் எதுவும் இடம் பெறவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com