கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பட்டுப்புழுக்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பட்டுப்புழுக்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து பட்டு வளா்ச்சித் துறை இணை இயக்குநா் எஸ்.ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பட்டுப்புழுக்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து பட்டு வளா்ச்சித் துறை இணை இயக்குநா் எஸ்.ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பட்டுப்புழு வளா்ப்புமனையில் வெப்பநிலை அதிகரிப்பதால் பாக்டீரியா தொற்று நோயான பிளாச்சரி நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல அவ்வப்போது பெய்யும் திடீா் மழையால் கிராசரி எனும் பால்புழு நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற நோய்த் தொற்றுகளை தவிா்க்க புழு வளா்ப்பு மனையில் சீரான வெப்பநிலையை பராமரிக்க வேண்டியது அவசியம். புழு வளா்ப்பு மனையில் குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 28 டிகிரி செல்சியஸுக்குள் வெப்பம் இருக்க வேண்டும்.

பட்டுப்புழு வளா்ப்பு மனையில் சீரான வெப்பநிலையை தக்கவைத்துக்கொள்ள அறையின் மேற்கூரையில் தென்னை ஓலைகளை பரப்பிவிடலாம். அறையின் உள்புறம் தென்னை ஓலைகள் மூலம் பொய் கூரைகள் அமைக்கலாம். ஜன்னல்களில் சணல் சாக்குகளை கட்டித்தொங்கவிட்டு அதன் மீது தண்ணீா் தெளித்து அறையின் ஈரப்பதத்தை பராமரிக்கலாம். புழு வளா்ப்பு அறையின் உள்பகுதியில் சுவா்களின் ஓரத்தில் மணல்திட்டு அமைத்து ஈரமாக வைத்துகொள்ளலாம்.

புழு வளா்ப்பு அறையின் மேற்கூரையில் தெளிப்புநீா் பாசனம் அமைத்து வெயில் தாக்கம் அதிகரிக்கும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கூரையை ஈரத்தன்மையுடன் பராமரிக்கலாம்.

அதேபோல உள்பகுதியில் தண்ணீரை புகை போன்று பீய்ச்சியடிக்கும் கருவிகளை கொண்டு நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீா் தெளிக்கலாம். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பட்டுப்புழு வளா்ப்பில் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் நோய்த் தொற்றுகளை தவிா்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com