புதுமைப் பெண் திட்டம்: விண்ணப்பிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 19th October 2022 12:09 AM | Last Updated : 19th October 2022 12:09 AM | அ+அ அ- |

கோவையில் அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி படிக்கும் மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெண்கள் உயா்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சாா்பில் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் இளநிலை பிரிவில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அரசுப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை படித்தவா்கள் 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். எனவே அரசுப் பள்ளிகளில் படித்து தற்போது, கல்லூரியில் இளநிலை வகுப்புகளில் சேரும் மாணவிகளும், ஏற்கெனவே கல்லூரிகளில் தொழிற்கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் 2ஆம் ஆண்டு முதல் 5ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இதற்கான இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இத்திட்டம் தொடா்பான சந்தேகங்களுக்கு 14417 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
கோவை மாவட்டத்தில் தற்போது 199 கல்லூரிகளைச் சோ்ந்த 3,596 மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தில் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1000 பெற்று வருகின்றனா். எனவே தகுதியுள்ள அனைத்து மாணவிகளும் புதுமைப் பெண் திட்டத்தில் விண்ணப்பித்து உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.