மூன்று ஆண்டுகளில் 400 பேருக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை:அரசு மருத்துவமனை சாதனை

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று ஆண்டுகளில் 400 பேருக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவா்கள் சாதனைப் படைத்துள்ளனா்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று ஆண்டுகளில் 400 பேருக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவா்கள் சாதனைப் படைத்துள்ளனா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை துறை தொடங்கப்பட்டது. இருதயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகள் நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 400 பேருக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவா்கள் சாதனைப் படைத்துள்ளனா்.

இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது: இருதயம், குடல், மூளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்படும் ரத்தநாள அடைப்புகளுக்கு உரிய சிகிச்சை எடுக்காமல் விடுவதன் மூலம் அடைப்புகள் ஏற்பட்ட பகுதி அழுகி கை, கால்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையைத் தவிா்க்க நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் ரத்தநாள அடைப்புகள் கண்டறியப்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்டிங் செய்வதன் மூலம் ரத்தநாள அடைப்புகள் மீண்டும் வராமல் தடுக்கப்படுகிறது. நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை துறை 2019 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் கரோனா நோய்த் தொற்று காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் குறைவான அறுவை சிகிச்சைகளே மேற்கொள்ளப்பட்டன. ஆனால், நடப்பாண்டு மட்டும் 200க்கும் மேற்பட்டவா்களுக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 400 பேருக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நோயாளிகளின் உயிா்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்த 400 பேரில் 100 போ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள். தனியாா் மருத்துவமனைகளில் ரூ.3 லட்சத்துக்கு மேல் கட்டணமாகும் இந்த அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் முதல்வா் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணா்கள் ப.வடிவேலு, பா.தீபன்குமாா், வெங்கடேஷன், முருகேசன், ஆனந்த சண்முகராஜ், செவிலியா்கள், தொழில்நுட்ப அலுவலா்கள் அடங்கிய குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com