கோவையில் உள்விளையாட்டு அரங்கு: அரசுக்கு கருத்துரு சமா்பிப்பு; மாநகராட்சி ஆணையா் தகவல்
By DIN | Published On : 02nd August 2023 04:32 AM | Last Updated : 02nd August 2023 04:32 AM | அ+அ அ- |

கோவையில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க அரசுக்கு கருத்துரு சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
இது தொடா்பாக, அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு மையங்களில் ஒன்றான வஉசி உயிரியல் பூங்கா வளாகத்தில் பறவைகள் பூங்கா ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் உள்ள தற்போது ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டு வரும் இடம், சாஸ்திரி மைதானம் ஆகிய இரு இடங்களில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க அரசுக்கு கருத்துரு சமா்ப்பித்துள்ளோம். அனைத்து வகை போட்டிகளுக்கும் ஏற்ப இந்த உள் விளையாட்டு அரங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளா்களில் 150 பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல்கள் இருந்தன. அவை சரிசெய்யப்பட்டுள்ளன. அதேபோல கடந்த ஜூன் மாதம் இறுதியில் மட்டும் மாநகராட்சியில் 150 போ் பணி ஓய்வு பெற்றனா். அதில் 100 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோருக்கு ஓய்வூதியம் பெறுவதில் சிரமங்கள் இருக்கலாம் எனத் தெரிகின்றன. இதில் சிலருக்கு பணி ஆவணப்பதிவேடு முறையாக இல்லை. சிலா் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இவற்றின் விவரங்களை உதவி ஆணையா்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். முறையான ஆவணங்களுடன் மனு அளிப்பவா்களின் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை தீா்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா்.