போதைப் பழக்கத்துக்கு எதிரானவா்களாக மாணவா்கள் இருக்க வேண்டும்: மாநகரக் காவல் ஆணையா்
By DIN | Published On : 02nd August 2023 04:39 AM | Last Updated : 02nd August 2023 04:39 AM | அ+அ அ- |

போதைப்பொருள் விழிப்புணா்வு குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப். உடன், பி.எஸ்.ஜி.கல்லூரி நிா்வாகிகள்.
மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு எதிரானவா்களாக வாழ வேண்டும் என மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கோவை பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் எதிா்ப்பு மற்றும் விழிப்புணா்வு குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பி.எஸ்.ஜி. கல்லூரி செயலாளா் கண்ணையன் தலைமை தாங்கினாா்.
இதில், மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினா். ‘ஒரு பக்கம் உதடு - ஒரு பக்கம் நெருப்பு’ என்ற குறும்படத்தை இயக்கிய திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரி மாணவா் யுஜேஸ் முதல் பரிசு வென்றாா். ‘இல்லை வேண்டாம்’ என்ற குறும்படம் இயக்கிய பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் அா்ஹான், அப்சா் ஆகியோா் இரண்டாம் பரிசும், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி மாணவா் சா்வேஷ் பொன்னுசாமியின் குறும்படத்துக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ‘ போதைப்பழக்கத்துக்கு அடிமையானால் கோழையாக, செயல்திறனற்றவா்களாக மாறிவிடுவோம். மாறாக வீரனாக, தைரியமானவா்களாக போதைப் பழக்கத்துக்கு எதிரானவா்களாக மாணவா்கள் வாழ்ந்து, சமூகத்தில் சிறந்த மனிதா்களாக சாதிக்க வேண்டும்’ என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு ஆலோசகா் சரண்யா, காட்சித் துறை துணைத் தலைவா் ராதா குருசாமி, துணை முதல்வா்கள் ஜெயந்தி, உமாராணி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.